ஒரே நாடு ஒரே தேர்தலை பயன்படுத்தி ஆட்சியை கலைத்து விடுவீர்களா என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் திமுக நிர்வாகி மனோகரன் இல்ல திருமண நிகழ்ச்சியில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது..
” திமுகவில் வாரிசு அரசியல் உள்ளது என விமர்சனம் வைக்கிறார்கள். திமுகவிற்கு கழகம்தான் குடும்பம், குடும்பம்தான் கழகம். கொள்கை குடும்பமாக இருக்கிறோம். அதுதான் முக்கியம். திமுக யார் காலிலும் தவழ்ந்து சென்று பதவியை பிடிக்கவில்லை. தமிழ்நாட்டை காப்பாற்ற எப்படி வெற்றியை கொடுத்தீர்களோ, அதேபோல ஒரு வெற்றி இந்தியாவிற்கும் தேவை.
இந்தியா என பெயரை கண்டு பாஜக அச்சப்படுகிறது. யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விட யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையால் திமுகவிற்கு மட்டுமல்ல எல்லா கட்சிகளுக்குமே பாதிப்புதான். ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த பாஜக தலைமையிலான மத்திய அரசு முயற்சிக்கிறது. ஒரே நாடு, ஒரே தேர்தலை நடத்தவே திடீரென நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரை மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்த பரிந்துரைகள் வழங்கும் குழுவில் திமுக சேர்க்கப்படவில்லை. பலிகடா ஆகப் போவதை உணராமல் அதிமுக ஒரே நாடு,ஒரே தேர்தலை ஆதரிக்கிறது. ஆளும் கட்சியாக இருந்தபோது ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை எதிர்த்த அதிமுக இப்போது ஆதரிக்கிறது.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கத்தில் இன்னும் ஆட்சி முடியவில்லை. இன்னும் 2.5 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி உள்ள நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தலை பயன்படுத்தி ஆட்சியை கலைக்க போகிறீர்களா..? இதன் மூலம் நாட்டின் அதிபராக இருக்க வேண்டும் என மோடி நினைக்கிறார்.
நமது நாட்டின் நிலை குறித்து அவர்கள் ஒருபோதும் கவலைப்படுவதில்லை. தேர்தல் செலவை குறைக்க ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் என்கிறார்கள். முதலில் நாட்டை கொள்ளையடிப்பதை நிறுத்துங்கள். ” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.







