செம்மஞ்சேரியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் மண்டல ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.அரவிந்த் ரமேஷ், சுந்தர், துரை சந்திரசேகர், சுதர்சனம், வரலட்சுமி மதுசூதனன் மற்றும் விசிக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பள்ளிக் கல்வித்துறையில் மாணவர்களின் நலன் குறித்தும், மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் கலந்தாலோசித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த சில வாரங்களில் தஞ்சை, நெல்லை, கோவை, வேலூர் ஆகிய மண்டலங்களில் ஆய்வுக் கூட்டம் முடிவடைந்த நிலையில் இன்று சென்னை மண்டலத்தில் இக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில், பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தனியார்ப் பள்ளிகளைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும், தலைமையாசிரியர், உதவி தலைமையாசிரியரை அழைத்து கலந்தாய்வு நடத்த அறிவுறுத்தினார். மேலும், மாணவர்களின் உணர்வுகளைக் கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும், உடற்கல்வி நேரத்தைத் தவிர்க்காமல் விளையாட வைக்கப்படுகிறார்களா எனக் கண்காணிக்க வேண்டும், மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை உருவாகும் வகையில் ஊக்குவிக்கும் பேச்சாளர்களைப் பேச வைக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
அண்மைச் செய்தி: ‘சென்னை மெட்ரோ; QR CODE மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகம்’
தொடர்ந்து பேசிய அவர், சென்னை மாநகராட்சியை ஒட்டியுள்ள பள்ளிகள் மாநகராட்சியோடு இணைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், பள்ளி கட்டமைப்பைச் சீரமைக்க 400 கோடி ஒதுக்கி மேம்பாடு செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், மாணவர்கள் தவறான முடிவை எடுப்பது அதிகம் தனியார்ப் பள்ளியில் படிக்கும் மாணவர்களாக உள்ளதாகத் தெரிவித்தார்.
பள்ளி மாணவர்களிடம் திடீரென பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சென்று பேசுங்கள் அதை வைத்துக் கலந்தாலோசிக்கலாம் என அறிவுறுத்திய அவர், மாணவர்களின் விவரங்களை முழுமையாகச் சேகரிக்க வலியுறுத்தினார். மேலும், அதிக ஆய்வுகளைப் பள்ளிகளில் மேற்கொள்ளுங்கள் எனப் பேசினார். அதன் பின்னர் 44வது சதுரங்க ஒலிம்பியாட் 2022 மாநில அளவிலான சதுரங்க பயிற்சி முகாம் மற்றும் போட்டிகளின் தொடக்க விழாவைத் தொடங்கி வைத்தார்.