மீனவ கிராமங்களுக்கு இடையே மோதல் – வீடு, வாகனங்கள் சூறை

நாகை அருகே இரண்டு மீனவ கிராமங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின்போது, வீடு, வாகனங்கள் சூறையாடப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனை செய்வதற்கும்,…

நாகை அருகே இரண்டு மீனவ கிராமங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின்போது, வீடு, வாகனங்கள் சூறையாடப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனை செய்வதற்கும், ஏலம் விடுவதற்கும் மேல பட்டினச்சேரி மற்றும் கீழப்பட்டினச்சேரி மீனவர்களுக்கு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. மீன்பிடி துறைமுகத்தில்
தங்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என மேல பட்டினச்சேரி கிராம மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

 

இதனிடையே, மேல பட்டினச்சேரி கிராம மீனவர்களுக்கும் தமிழக அரசால் கட்டப்பட்ட துறைமுகத்தில் மீன் விற்பனை மற்றும் மீன் ஏலம் விடுவதற்கு சம உரிமை வழங்க வேண்டும் என்று கடந்த மாதம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நடைபெற்ற சமாதான பேச்சு வார்த்தை கூட்டத்தில் பேசி முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில், மேலபட்டினச்சேரி கிராம நிர்வாகிகள் சுரேஷ், மற்றொரு சுரேஷ் உள்ளிட்ட சிலர் மீது எதிர்தரப்பு மீனவ கிராம மக்கள் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மேலபட்டினச்சேரி கிராம மீனவர்கள் நாகூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கிராமத்தில் யாருல் இல்லாததையறிந்த கீழப்பட்டினச்சேரி மீனவர்கள், மேலபட்டினச்சேரிக்குள் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். வீடுகளை அடித்து நொறுக்கியதோடு, இருசக்கர வாகனங்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். கையில் ஆயுதங்களோடு 50 பேர் கொண்ட கும்பல் ரகளையில் ஈடுபட்ட காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளன.

 

இது குறித்த தகவலறிந்ததும், இரண்டு கிராமங்களிலும் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் தலைமையிலான அதிவிரைவுப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனிடையே, மோதலின்போது காயமடைந்த மேலபட்டினச்சேரி கிராம மீனவர்கள் இரண்டு பேர் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.