கனமழையால் அரசு பேருந்து மீது முறிந்து விழுந்த மரம்.. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்!

நீலகிரியில் தொடர் கனமழை பெய்துவரும் நிலையில், அனுமாபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது ராட்சத மரம் முறிந்து விழுந்தது. நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. இதனால் கடந்த ஒருவார…

நீலகிரியில் தொடர் கனமழை பெய்துவரும் நிலையில், அனுமாபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது ராட்சத மரம் முறிந்து விழுந்தது.

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. இதனால் கடந்த ஒருவார காலமாக உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கனமழையால் சாலைகளில் மண் சரிவுகள் ஏற்பட்டும், மரங்கள் விழுந்தும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று உதகை அருகே உள்ள அனுமாபுரம் பகுதியில், கூடலூரில் இருந்து உதகை வழியாக பயணிகளுடன் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த தமிழ்நாடு அரசு விரைவு பேருந்தின் மீது சாலையோரம் இருந்த மரம் சாய்ந்து விழுந்துள்ளது. இதில் பேருந்தின் முன்பகுதி மற்றும் முன்பக்க கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. இவ்விபத்தில் பேருந்தின் ஓட்டுநருக்கு சிறு காயங்கள் ஏற்பட்ட நிலையில், பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.

இதனையடுத்து பயணிகள் உடனடியாக பேருந்தில் இருந்து வெளியேறிய நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பயணிகளை மாற்று பேருந்துகள் மூலம் உதகைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் உதகை கூடலூர் செல்லும் சாலையில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து நெடுஞ்சாலை துறையினர் சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.