நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக ஒரே அறையில் இருவர் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட கழிப்பறை, மாற்றியமைக்கப்படும் என கோவை மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.
கோவை அம்மன் குளம் பகுதியில் உள்ள மாநகராட்சி பொதுக்கழிப்பிடத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கபட்ட கழிப்பறை கதவு இல்லாமல் அமைக்கபட்டு ஒரே அறையில் இரு கழிப்பிடம் அமைக்கப்பட்டிருந்தது தொடர்பாக நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.
இது தொடர்பாக கோவை மாநகராட்சி பொறுப்பு ஆணையர் மரு.மோ.ஷர்மிளா வெளியிட்டுள்ள அறிக்கையில், 1995 ஆண்டு கட்டப்பட்ட இந்த கழிப்பறையில் பெற்றோரின் கண்காணிப்பில் சிறுவர்கள் இந்த கழிப்பிடத்தை உபயோகப்படுத்த வேண்டும் என்பதற்காக கதவுகள் இல்லாமல் அமைக்கப்பட்டதாகவும், தற்போது உபயோகம் இல்லாமல் இருப்பதால் பெரியவர்களுக்கு சிறுநீர் கழிப்பிடமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கழிப்பிடத்தில் உள்ள பழுதுகளை நீக்கி பராமரிப்பு செய்ய பணிகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்த அவர் சிறுவர்கள் உபயோகப்படுத்த அமைக்கப்பட்ட கழிவறை உபயோகம் இல்லாமல் இருப்பதால் அவைகளை பெரியவர்களுக்கான சிறுநீர் கழிப்பிடமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது என கூறினார். மேலும் பணிகள் விரைவில் முடிந்து மக்களின் பயன்பாட்டிற்கு வரும் எனவும் மாநகராட்சி ஆணையர் மரு.மோ.ஷர்மிளா தெரிவித்தார்.







