ஓமலூர் அருகே வீட்டில் கட்டியிருந்த ஆடுகளை திருட வந்த பெங்களூருவைச் சேர்ந்த திருடனை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள நடுப்பட்டி ஊராட்சி காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் அதே பகுதியில் மனைவி சங்கீதா, மகன் அபிஷேக் ஆகியோருடன் வசித்து வருகிறார். ஒர்க் ஷாப் வைத்து தொழில் செய்து வரும் அவர், தனது வீட்டில் 3 ஆடுகள், 5 மாடுகளை வளர்த்தும் வருகின்றார்.
இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் ஆடு, மாடுகளை வீட்டின் அருகே கட்டி வைத்து விட்டு வீட்டிற்குள் தூங்கிவிட்டனர். அதிகாலை 3 மணிக்கு ஆடுகள் சத்தம் கேட்டு வந்து பார்த்தார். அப்போது, அங்கு ஒருவர் ஆடுகளின் கயிற்றை அவிழ்த்துவிட்டு, அருகே சேலம் – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரோட்டில் மோட்டார் சைக்கிளில் தயாராக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை நோக்கிச் சென்றார்.
இதனைக் கண்டு முருகேசன் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் அந்த நபரை பிடித்தனர். மற்ற இரண்டு பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். பிடித்து வைத்திருந்த திருடனை விசாரித்தபோது கர்நாடக மாநிலம் ஆனைக்கல் பகுதியை சேர்ந்த வீரபத்திரா என்பவரது மகன் சம்பத் 20 என்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அவரை தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் பொது மக்கள் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மற்ற இரண்டு பேர்களும் கர்நாடக மாநிலம் ஆனைக்கல் பகுதியைச் சேர்ந்த சசி மற்றும் ஆஞ்ஜி எனக் கூறினார். இதுகுறித்து தீவட்டி பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பிச் சென்று இவர்கள் இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.







