ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்ற நடிகர் சூர்யா, நடிகர் மாதவனை சந்தித்துப் பேசினார்.
நடிகர் மாதவன் தயாரித்து இயக்கி நடித்துள்ள திரைப்படம் ராக்கெட்ரி தி நம்பி
எஃபெக்ட். ஜூலை 1ஆம் தேதி இந்தத் திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. இந்தப் படத்தின் மூலம் நடிகர் மாதவன் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படம் ஆங்கிலம், தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானியும், விண்வெளிப் பொறியாளருமான நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றுப் படமான இப்படத்தில் மாதவன் காதநாயகனாக நடிக்கிறார்.
நம்பி நாராயணன் மீது மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, தேசத் துரோகி பட்டம் கட்டப்படுகிறது. இதிலிருந்து மீண்டு தான் ஒரு துரோகி அல்ல என்பதை நிரூபிக்கும் முயற்சியில் நம்பி நாராயணன் ஈடுபடுகிறார். இந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யா ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், ஷூட்டிங் தளத்திற்குச் சென்ற நடிகர் சூர்யா விஞ்ஞானி நம்பி நாராயணனை போன்ற கெட்டப்பில் இருந்த மாதவனைப் பார்த்து வியந்த காட்சிகளை நடிகர் மாதவன் தற்போது அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-ம.பவித்ரா








