அதிமுக என்ற கட்சியின் பெயரை உருவாக்கியது அக்கட்சியின் மறைந்த தலைவர் எம்.ஜி.ஆர் என நாம் நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் அது உண்மையல்ல என்பதே வரலாறு. தமது தொண்டர் ஒருவர் பதிவு செய்து வைத்திருந்த பெயரையே அவர் பெற்றுக் கொண்டார் என்பதே நிஜம்.
எம்.ஜி.ஆர். தனது திரைப்படங்களின் மூலம் மக்கள் மனதில் சிம்மாசனம் அமர்ந்திருந்தார். இந்த சூழ்நிலையில்தான் திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் பேரறிஞர் அண்ணாவின் வசீகர பேச்சால் ஈர்க்கப்பட்டு திமுகவில் முதலில் தம்மை இணைத்துக்கொண்டார் எம்.ஜி.ஆர். அத்தோடு இல்லாமல் திமுக சித்தாந்தங்களை தனது படங்களில் வெளிப்படுத்தி, மக்களின் ஆதரவை திரட்டினார்.பின்னர் பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்கு பிறகு திமுக தலைவராக மு.கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் தமிழக முதலமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்தநிலையில், எம்.ஜி.ஆர். எங்கு சென்றாலும் கூட்டம் அலைமோதியது. திமுக தலைவர் கருணாநிதியிடம் இது நமக்கு நல்லதல்ல என ஒரு கூட்டம் பிரச்சனையை கிளறியது. அது ஒருபுறமிருக்க, எம்.ஜி.ஆர். உட்கட்சி விவகாரங்களை பேசி, கருணாநிதிக்கு நெருக்கடி கொடுத்தார். இதையே காரணமாக, வைத்து கடந்த 1972ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதியன்று எம்.ஜி.ஆரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கினார் கருணாநிதி. பின்னர் அடுத்த நான்கு நாட்களில் அவரை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார்.
இதனை எதிர்த்து போராடியவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆத்திரமடைந்த எம்.ஜி.ஆர். ஆதரவாளர்கள் அவர்களை விடுதலை செய்யக்கோரி 2 அரசு பேருந்துகளுக்கு தீ வைத்தனர். மேலும் நடிகை செளகார் ஜானகி கார் மீது கல்வீசி தாக்குதல் நடைபெற்றது. போராட்டம் தீவிரமடைந்தததால் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
இதனையடுத்து புதிய கட்சி தொடங்குவது என எம்.ஜி.ஆர் முடிவெடுத்தார். அப்போது கட்சியின் பெயரில் தம்மை அரசியல் குரு, அண்ணாவின் பெயர் இருக்க வேண்டும் என விரும்பினார். மேலும் அனகாபுத்தூர் ராமலிங்கம் என்பவர் அதிமுக என்ற பெயரில் பதிவு செய்து வைத்திருந்த இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டார். ஒரு சாதாரண தொண்டன் தொடங்கிய இயக்கத்தில் தம்மை இணைத்துக்கொண்டதாக அப்போது எம்.ஜி.ஆர. அறிவித்தார். அத்தோடு இல்லாமல் பிற்காலத்தில் அந்த தொண்டன் ராமலிங்கத்தை மேல்சபை உறுப்பினராகவும் ஆக்கினார். இப்படிதான் 1972ல் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் உருவானது.
பின்னால் இது அனைத்திந்திய திராவிட முன்னேற்ற கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதன் பின்னர் கால ஓட்டத்தில் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, ஓ.பி.எஸ் மற்றும் இபிஎஸ் என பல தலைவர்களை அக்கட்சி உருவாக்கி உள்ளது.
இராமானுஜம்.கி








