அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்த நிலையில், சென்னை ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் முதலில் அதிமுக செயற்குழு கூடியது. 300 க்கும் அதிகமான செயற்குழு உறுப்பினர்கள் அதில் பங்கேற்றனர். பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய 16 தீர்மானங்களை மூத்த தலைவர் பொன்னையன் முன்மொழிந்தார். 16 தீர்மானங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டு செயற்குழு நிறைவு பெற்றது.
இதனைத் தொடர்ந்து அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியது. பொதுக்குழு மேடைக்கு எடப்பாடி பழனிசாமி வருகை தந்த நிலையில், வெற்றி மீது வெற்றி வந்து உன்னைச் சேரும் என்ற பாடல் ஒலித்தது. பொதுக்குழுவில் 16 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. பொதுக்குழுவில் அதிமுகவின் கழக சட்டவிதி 20 அ பிரிவு 7ன்படி கழகத்தின் இடைக்கால பொதுச் செயலாளராக எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்படுவதாக அதிமுகவின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.







