ஆந்திர மாநில அரசு தடுப்பணைகள் கட்டுவதை எதிர்த்து திருவள்ளூர் மாவட்டத்தில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக எல்லையான பள்ளிப்பட்டு பேரூராட்சி முன்பு ஆந்திர மாநில அரசு தடுப்பணைகள் கட்டுவதை எதிர்த்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாமகவை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெண்கள் ஆண்கள் என 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு முன்பு அன்புமணி ராமதாஸ் பள்ளிப்பட்டு பஜார் வீதியில் ஆந்திர மாநில அரசு தடுப்பணை கட்டக்கூடாது என்ற பதாகையுடன் தொண்டர்களுடன் ஊர்வலமாக ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்தார்.
அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ் தமிழக அரசு உடனடியாக ஆந்திர மாநில அரசு கட்டும் தடுப்பணை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தமிழகத்தின் நீர் நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும் பேசினார். பின்பு சென்னையில் வசிக்கும் ஒரு கோடி மக்களுக்கு நீர் ஆதாரமாக விளங்குவது பூண்டி ஏரி, அந்த ஏரிக்கு கொசஸ்தலை ஆற்றிலிருந்து தான் தண்ணீர் வருகிறது. தற்போது இந்த கொசஸ்தலை ஆற்றுத் தண்ணீரைத் தடுத்து ஆந்திர மாநில அரசு அணை கட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பேசினார்.
ஆர்ப்பாட்டத்திற்குப் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ் பேசியதாவது, திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிப்பட்டு பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் வரும் தண்ணீர் ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அம்மா பள்ளி அணையிலிருந்து வருகிறது. இந்த பகுதியில் இரண்டு இடங்களில் தடுப்பணைகள் கட்டுவதற்கு ரூ.177 கோடியில் ஆந்திர மாநில அரசுத் திட்டம் வகுத்து அதற்கான செயல்பாடுகளில் இறங்கி உள்ளது. தமிழக அரசு இதனைத் தடுத்து நிறுத்த,சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு உச்சநீதிமன்றம் வரை சென்றாவது ஆந்திரா அரசு கட்டி வரும் தடுப்பணையைத் தடுத்து நிறுத்த வேண்டும். 

கர்நாடகா, ஆந்திரா, கேரளா, போன்ற மாநில அரசுகள் தமிழகத்திற்கு வரவேண்டிய நீர் ஆதாரங்களைத் தடுத்து நிறுத்தி வருவதால் விவசாயிகள் மிகப்பெரிய அளவில் பாதிப்படைகின்றனர். மேலும் இதற்கான செயல் திட்ட வடிவங்களைத் தமிழக அரசு முன்னெடுத்து,நீர் நிலை செயல் திட்டத்திற்கு என்று தனிக் கவனத்தைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் தஞ்சாவூருக்கு அடுத்தபடியாக நீர் நிலைகள் அதிகமாக உள்ள பகுதி திருவள்ளூர் மாவட்டமாகும். ஆந்திர மாநில அரசு தடுப்பணை கட்டுவதனால் திருவள்ளூர் மாவட்ட மக்களுக்குக் குடிநீர் ,விவசாயம் ஆகியவற்றைப் பாதிக்கும். அதனால் இந்த தடுப்பணை திட்டங்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
பின்னர் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகனுக்கு கோரிக்கை வைத்த அன்புமணி, இரு மாநில அரசு மற்றும் மக்களின் நல்லுறவுகளும் நல்லபடியாக இருக்க வேண்டும் ஆகையால் கொசஸ்த்தலை ஆற்றுக்கு வரவேண்டிய தண்ணீரைத் தடுத்து நீங்கள் தடுப்பணை கட்டும் திட்டத்தினை கைவிட வேண்டும். இது ஜெகன்மோகன் ரெட்டிக்கு நாங்கள் வைக்கும் அன்பான வேண்டுகோள் என்று கூறினார்.
தமிழகத்தில் ராஜாக்கள் ஆண்ட காலத்தில் 42 ஆயிரம் நீர்நிலைகள் ஏரி & குளங்கள் இருந்தது, தற்போது 50 ஆண்டுக்கால ஆட்சி செய்து வரும் அரசுகள் இதில் ஐந்தாயிரம் நீர்நிலை ஏரி & குளங்கள் காணவில்லை. தமிழகத்தில் 37,000 நீர் நிலைகள் ஏரி & குளங்கள் மட்டுமே உள்ளது நீர்நிலை ஆக்கிரமிப்புகளைத் தடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் எடுத்து வரும் நடவடிக்கைகளை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் நீர்நிலை ஆக்கிரமிப்பைத் தடுக்க வேண்டும் என்றால், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இதற்கான ஒரு குழுவை அமைக்க வேண்டும். அரசியல் சார்பற்ற இந்த குழு தமிழகத்தில் எந்த அரசு வந்தாலும் செயல்பட வேண்டும். தேவைப்பட்டால் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாகச் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் இது குறித்து மனு கொடுத்து இது சம்பந்தமாக வலியுறுத்துவோம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். 

மேலும் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுக்கா எல்லையின் அருகில் ஆந்திர மாநிலத்தில் கரும்பு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையிலிருந்து வெளியேறும் கழிவு நீர் பள்ளிப்பட்டு பகுதியில் செல்லும் லவா ஆற்றில் கலக்கின்றது, இதனால் பள்ளிப்படை சுற்றி வசிக்கும் 10க்கும் மேற்பட்ட கிராம மக்களின் குடிக்கும் தண்ணீர் மாசு அடைந்துள்ளது. இதனைத் தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
நீர் நிலை பாதுகாப்புக்கு என்று தமிழக அரசு சிறப்புச் செயல் திட்டங்களைச் செயல்படுத்தி விரைவாகத் தமிழகத்தில் நீர் நிலைகளைக் காக்க வேண்டும். மேலும் மீண்டும் தடுப்பணைகளைக் கட்டுவதற்கு ஆந்திரா அரசு முற்பட்டால் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களைத் திரட்டி மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார், இந்த ஆர்ப்பாட்டத்தில் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் பொதுமக்கள் எனப் பலர் பங்கேற்றனர்.






