கொரோனா காலத்தில் மக்கள் அனைவரும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதால், வாகன உரிமையாளர்களுக்கு விதிக்கப்ப்ட்ட அபராதத்தில் தெலுங்கானா மாநில போலீஸார் சலுகை அளித்துள்ளனர்.
விதிகளை மீறிய வாகன உரிமையாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத்தில் சலுகை ஒன்றை அளித்துள்ளது தெலுங்கானா காவல்துறை. இதுகுறித்து பேசிய தெலுங்கானா மாநிலத்தின் போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் எவி. ரங்கநாத், “கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் அனைவரும் கொரோனா காரணமாக பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர். இதனால் போக்குவரத்து காவல்துறை விதித்த அபராத்தத் தொகையை அவர்களால் சரிவர செலுத்த முடியவில்லை. கொரோனா காலத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளும் வகையில், விதிக்கப்பட்ட அபராதத்தில் ஒரு சலுகையை அளிக்கிறோம்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தில் 75% சலுகை வழங்கப்படுகிறது. இதனால் வாகன உரிமையாளர்கள் 25% அபராத தொகையை மட்டும் செலுத்தினால் போதும் என்று தெரிவித்தார். இதற்கு எடுத்துக்காட்டாக, ஒரு வாகன உரிமையாளர் 1000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றால், அளிக்கப்பட்ட சலுகை படி, 250ரூ மட்டும் கட்டினால் போதுமானது.
கனரக வாகன உரிமையாளர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தில் 50% சலுகை வழங்கப்படுவதாகவும், பேருந்து உரிமையாளர்களுக்கு 70% சலுகையையும், தள்ளு வண்டி வாகன உரிமையாளர்களுக்கு 80% சலுகையும் வழங்குவதாக அவர் தெரிவித்தார். மேலும் முகக்கவசம் அணியாமல் வந்த வாகன உரிமையாளர்களுக்கு 90% சலுகையும் வழங்குவதாக அவர் தெரிவித்தார்.
தெலுங்கானா காவல்துறை அளித்துள்ள இந்த சலுகையானது சாமானியர்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அளிக்கப்பட்டுள்ள இந்த சலுகையானது மார்ச் 1 முதல் 31ம் தேதி வரை செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.







