மாமியார் வீட்டில் கொடுமைப்படுத்துவதால் அவர்கள் மீது நடவடிக்கை கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் 8 மாத கர்ப்பிணி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
புதுக்கோட்டை, மணமேல்குடி தாலுகா கோட்டைப்பட்டினம் சங்கம் தெருவில்
வசித்து வரும் நூர்முகமது என்பவருக்கும் பஷீரா பானுவுக்கும் கடந்த வருடம்
திருமணம் நடைபெற்றது. பஷீரா பானு தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார்.
கடந்த சில மாதங்களாக கணவர் வீட்டில் தன்னை விவாகரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தினமும் கொடுமைப்படுத்தி வருவதாக பஷீரா பானு கூறினார். இது தொடர்பாக பல முறை மணமேல்குடி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறினார்.
இதனால் இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றநிலையில், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தனது
மாமியார் மற்றும் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியர்
அலுவலக நுழைவாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
சம்பவ இடத்திற்கு வந்த திருக்கோகரணம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கீதா அந்தப் பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியரை சந்திக்க அழைத்துச் சென்றார். இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் அந்த பெண்ணை விசாரித்து சமூக நலத்துறை அதிகாரியிடம் இந்த பெண்ணின் பிரச்னை குறித்து விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.சமூக நலத்துறை அதிகாரிகள் அந்த பெண்ணை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் கர்ப்பிணி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.










