ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்கிய மெட்டா நிறுவனத்தின் த்ரெட்ஸ் அறிமுகப்படுத்தப்பட்ட 10 நாள்களில் 15 கோடி பேர் இணைந்துள்ளனர்.
எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ட்விட்டருக்கு நேரடி போட்டியாக வடிவமைக்கப்பட்ட டெக்ஸ்ட் மற்றும் போட்டோ அடிப்படையிலான ஆப் ஆன த்ரெட்ஸை மெட்டாவிற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியா உட்பட 100க்கும் மேற்பட்ட நாடுகளில் த்ரெட்ஸ் ஆப்ஸ் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நமது இன்ஸ்டாகிராம் கணக்கைப் பயன்படுத்தி உள்நுழைந்து, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உள்ளடக்கிய 500 எழுத்துகள் கொண்ட ‘த்ரெட்களை’ நாம் பதிவிடலாம்.
இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்திருப்பவர்கள் அதனை கொண்டே த்ரெட்ஸை பயன்படுத்தலாம். இதற்காக தனி கணக்கு தொடங்க தேவையில்லை. இதில் ஒருவர் 500 எழுத்துக்கள் வரை ஒரு பதிவில் எழுதலாம். textகள் பிரதானம் என்றாலும் கூட, புகைப்படங்கள், ஷார்ட்ஸ், வீடியோக்களையும் பகிர முடியும். இந்த ஆப் அறிமுகம் செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே பல கோடி பயனர்கள் அதனை டவுன்லோடு செய்து கணக்கு தொடங்கினர்.
பெரும்பாலான பிற தளங்களுடன் ஒப்பிடும் போது, த்ரெட்ஸ் வளர்ச்சி ஒரு புதிய வரலாற்றை உருவாகியுள்ளது. குறிப்பாக நேரடி போட்டியாளரான ட்விட்டர் உடன் ஒப்பிடும்போது, ஒரு கோடி உறுப்பினர்களை அடைய ட்விட்டருக்கு இரண்டு ஆண்டுகள் பிடித்தன என்று தரவுகள் கூறுகின்றன.
ஆனால் த்ரெட்ஸ் ஆப் அறிமுகம் செய்யப்பட்ட முதல் 24 மணி நேரத்திற்குள் 3 கோடி பயனர்களை பெற்றது. கடந்த வாரம் வெள்ளியன்று, மெட்டாவின் தலைமை நிர்வாகி மார்க் ஜுக்கர்பெர்க் த்ரெட்ஸ் ஆப் 7 கோடி கணக்குகளை தாண்டிவிட்டதாக அறிவித்தார். இந்நிலையில் செயலி தொடங்கி 10 நாள்களில் அதன் பயனர்களின் எண்ணிக்கை 15 கோடியைக் கடந்துள்ளது.







