அறந்தாங்கி அருகே பனைமரத்தில் மோதிய பிக்கப் வாகனம் – கணவன், மனைவி உயிரிழப்பு!

அறந்தாங்கி அருகே பிக்கப் வாகனம் சாலையோரத்தில் இருந்த பனைமரத்தில் மோதி விபத்திற்குள்ளானதில் கணவன், மனைவி இருவரும் உயிரிழந்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகா தூராங்குடி கிராமத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் பொலிரோ பிக்கப் வாகனத்தில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுங்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவிலுக்கு சிவராத்திரி விழாவிற்காக நேற்று சென்றுள்ளனர். இந்த நிலையில் இரவு முழுவதும் சிவராத்திரி விழாவிற்காக கண்விழித்து சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று அதிகாலை கோவிலில் இருந்து அதே வாகனத்தில் வீடு திரும்பியுள்ளனர்.

அறந்தாங்கி தாலுக்கா புறங்காடு அருகே சென்றபோது பொலிரோ பிக்கப் வாகனம் சாலை அருகே இருந்த பனை மரத்தின் மீது அதிவேகமாக மோதி விபத்திற்குள்ளானது. அப்போது சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் காயமடைந்தவர்களை மீட்டு தனியார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் மூலம் அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வந்த கணவன் மனைவி இருவரும் உயிரிழந்துள்ளனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய வாகனம் விபத்துக்குள்ளாகி கணவன் -மனைவி உயிரிழந்த சம்பவம் அறந்தாங்கி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.