“மலர்ந்தும் மலராத பாதிமலர்போல் மணம் வீசும் பாசமலர்”

அண்ணனுக்காக தங்கையோ, தங்கைக்காக அண்ணனோ விட்டுக்கொடுத்தால், பாசமலர் சிவாஜி – சாவித்திரி என கிண்டலாய் சொன்னாலும் 1961ம் ஆண்டு வெளியான பாசமலர் திரைப்படம் இன்னும் மனதில் நிலைத்திருக்கிறது. சிவாஜியுடன் ‘ப’ வரிசை படங்களை இயக்கி…

அண்ணனுக்காக தங்கையோ, தங்கைக்காக அண்ணனோ விட்டுக்கொடுத்தால், பாசமலர் சிவாஜி – சாவித்திரி என கிண்டலாய் சொன்னாலும் 1961ம் ஆண்டு வெளியான பாசமலர் திரைப்படம் இன்னும் மனதில் நிலைத்திருக்கிறது. சிவாஜியுடன் ‘ப’ வரிசை படங்களை இயக்கி தமிழ்த்திரையுலகில் தனக்கென முத்திரை பதித்த இயக்குநர் பீம்சிங்கை ‘பீம்பாய்’ என்றே அழைக்கும் சிவாஜியின் நடிப்பில் படிக்காத மேதையும் உருவானார்.

‘பாவ மன்னிப்பு’, ‘பாசமலர்’, ‘பந்த பாசம்’, ‘பார்த்தால் பசி தீரும்’ என ‘ப’ வரிசைப் படங்களை தொடர் வெற்றிகளாகக் கொடுத்தார் பீம்சிங். ஒவ்வொரு திரைப்படத்திலும் சிவாஜியின் அத்தனை பாத்திரங்களையும் இயக்குநர் பீம்சிங் செதுக்கி வடிவமைத்தார். இந்த சூழ்நிலையில் சிவாஜியுடன் இணைந்த படம் பாசமலர்… பாசமலருக்கு கதை எழுதியவர் கேரளத்தின் கொட்டாரக்கரா என்ற எழுத்தாளர். உரையாடல்களை எழுதியவர் ஆரூர்தாஸ். சிவாஜியை அங்குலம் அங்குலமாக ரசித்த இயக்குநர் ஏ.பீம்சிங், ’பாசமலர்’ திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் அனுபவித்து படமாக்கியிருப்பார்….

பாசமலர் திரைப்படத்தில் மட்டுமின்றி நேரிலும் மாப்பிள்ளை என ஜெமினி கணேசனை உரிமையுடன் அழைப்பது சிவாஜியின் வழக்கம். அதுவே தங்கையின் கணவராக பாசமலரிலும் நீடித்ததால் இயல்பாகவே காட்சிகள் அமைந்தன. அந்தக்காலத்தில் ‘வாராயோ தோழி வாராயோ…’ பாடல் ஒலிக்காத திருமண வீடுகளே இல்லை. திரைப்படம் வெளியான பிறகு, வீடுகளில் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தைக்கு பாசமலர் படத்தில் சாவித்திரியின் கதாபாத்திரமான ‘ராதா’ என பெயர் வைத்தனர்…

விஸ்வநாதன் – ராமமூர்த்தியின் இசையில், கண்ணதாசனின் பாடல்கள் கிறங்க வைத்தன. திரையிட்ட பல திரையரங்குகளில் நூறு நாட்களைக் கடந்து ஓடிய நிலையில் தீபாவளிக்கு புதுப்படங்கள் வெளியிட வேண்டி இருந்ததால் ‘பாசமலர்’ படம் திரையரங்குகளிலிருந்து எடுக்கும்படியாயிற்று.

பாசமலர் திரைப்படம் வெளியாகி 60 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இன்னும் பல நூற்றாண்டுகள் ஆனாலும், அண்ணன் தங்கை எனும் பாசம், மலராக நறுமணம் வீசிக்கொண்டே இருக்கும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.