சென்னை போரூர் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞரை வெட்டிப்படுகொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கல் சுப்பிரமணியம் நகர், பொன்னியம்மன் கோயில் தெருவில் நேற்று இரவு சுமார் 23 வயது மதிக்கத்தக்க இளைஞர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை வெட்டிப்படுகொலை செய்தது.
அந்த இளைஞரின் இரண்டு கைகளும் துண்டாக்கியதுடன், யார் என்று அடையாளம் தெரியாத வகையில் முகத்தை வெட்டி சிதைத்து விட்டு அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போரூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் சம்பவ இடத்துக்கு ஆவடி காவல் இணை ஆணையர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் கொலை செய்யப்பட்ட நபர் வந்த மோட்டார் சைக்கிள், செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தும், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
—கா.ரூபி







