இசைப்புயல் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் 56வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது திரைப்பயணம் குறித்த சில சுவாரசிய தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்திய சினிமாவில் அசைக்க முடியாத இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். அவர் இன்று தனது 56வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். திரையுலகில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் பட்டி, தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. முதல் படத்திலேயே மக்களின் மனதை வென்றார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து அவருக்கு பல திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது. இதையடுத்து தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்தார். வெஸ்டர்ன் ஸ்டைல் இசையை கொடுக்கும் இவர் கிழக்கு சீமையிலே, கருத்தம்மா போன்ற கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களுக்கும் இவர் அமைத்த இசை மனதை வருடியது. மண்வாசம், சோகம், அண்ணன் தங்கை பாசம், காதல் போன்ற அனைத்தையும் அவரது இசையில் கலந்து கொண்டார் என்றால் அது மிகையாகது.
இசை உலகில் தனக்கென தனி முத்திரை பதித்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார். ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது, பாஃப்டா விருது, தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர்.
ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறார். ஆஸ்கார் விருது வாங்கும் மேடையில் தனது தாய்மொழியான தமிழில் எல்லா புகழும் இறைவனுக்கே என்று கூறினார். இந்த கூற்று தற்போது பலரின் தாரக மந்திரமாக உள்ளது.
மேலும் இத்திரைப்பட இசைக்காக இவருக்கு 2008ம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதும், பாஃப்டா விருதும் கிடைத்தன. இவ்விரு விருதுகளைப் பெற்ற முதலாவது இந்தியரும் இவரேயாவார். இவருக்கு 2010ம் ஆண்டில் இந்திய அரசின் பத்ம பூஷண் விருது அளிக்கப்பட்டது. இவர் ஆசியாவின் மொசார்ட் என்று அழைக்கப்படுகிறார்.ரகுமான் ஜனவரி 6ம் தேதி சென்னையில் பிறந்தவர். இயற்பெயர் திலீப்குமார். 1985ல் இசையுலகப் பயணம் ஆரம்பித்தது. இவரின் குடும்பம் இசை சார்ந்தது. இவரின் தந்தை சேகர் மலையாள திரைப்படத்துறையில் பணியாற்றியவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். அதன் பின் குடும்பத்தில் வருமானம் இல்லாத நிலையில் தன் தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்குவிட்டு அந்த வருமானத்தில் கஷ்டத்தோடு பியானோ, ஹார்மோனியம் மற்றும் கிதார் வாசிக்க கற்று கொண்டார். தன்ராஜ் மாஸ்டரிடம் முறைப்படி இசை கற்றுக் கொண்டார்.
11 வயதில் இளையராஜா இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்தார். பின்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடன் பணியாற்றினார். டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றார்.1992ல் தனது வீட்டிலேயே மியூசிக் ரெக்கார்டிங் தியேட்டர் அமைத்தார். அதே ஆண்டு வெளியான மணிரத்தினத்தின் ரோஜா திரைப்படம், இவருடய வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பிரபலமாயின. இவருக்கு முதல் தேசியவிருது வாங்கித் தந்தது. பின்னர் 1997ல் மின்சாரக்கனவும், 2002 லகான் இந்தி படமும், 2003ல் கன்னத்தில் முத்தமிட்டால் படமும் இவருக்கு தேசிய விருகள் வாங்கி தந்தன.
மேற்கத்திய இசைகளை கேட்டு கொண்ட நம்மிடம் நாம் நாட்டின் இசையை பரவ செய்ததோடு, உலகம் முழுவதும் நம் நாட்டின் இசையை பரவ செய்தவர் ஏ.ஆர்.ரகுமான்.
இவர் தனது இசையால் ரசிகர்களை கட்டி போட்டதோடு மட்டுமல்லாமல், தனது வசீகரமான குரலாலும் இசை ரசிகர்களை கட்டு போட்டுள்ளார். ரோஜா திரைப்படத்தில் வரும் சின்ன சின்ன ஆசை பாடலில் சிறு பகுதியை பாடிய இவர் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பொன்னிநதி பாடல் வரை பாடியுள்ளார்.