மதுரை மல்லி இயக்கம், பலா இயக்கம், முருங்கை இயக்கம், மிளகாய் மண்டலம், என விவசாயிகளின் வாழ்வாதரம் மேம்பட ஏராளமான புதிய திட்டங்கள் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட் டை இன்று தாக்கல் செய்தார். அப்போது, மல்லிகைக்கு புகழ்பெற்ற மதுரையை மையமாக வைத்து தொகுப்பு ஏற்படுத்துவது மிகவும் உகந்தது என கருதி, மதுரை மட்டுமன்றி விருதுநகர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் சாகுபடி செய்யப்படும் மல்லிகையின் உற்பத்தியை மேம்படுத்த மதுரை மல்லி இயக்கம் உருவாக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
மல்லிகை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மல்லிகைப்பூக்கள் கிடைத்திடும் வகையில் ரூ.7 கோடி மதிப்பில் மதுரை மல்லி இயக்கம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் அறிவித்தார்.
அண்மைச் செய்திகள்: தென்னை உற்பத்தியை அதிகரிக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு; வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!
பலா தொடர்பான ஆராய்ச்சிகளை வலுப்படுத்தி புதிய ரகங்கள், உயர் மகசூல் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை மேம்படுத்த பலா இயக்கத்திற்கு ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என கூறினார்.
வரும் ஆண்டில் 1,000 ஹெக்டர் பரப்பில் முருங்கை சாகுபடி ஊக்குவிக்கப்படுவதோடு முருங்கை ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையிலும் ரூ.11 கோடி மதிப்பில் பல்வேறு சிறப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் கூறினார்.
ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் 1,000 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு மிளகாய் சாகுபடி செய்யப்படும் எனவும் அமைச்சர் அறிவித்தார். இதற்கான திட்டத்திற்காக ரூ.6 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அமைச்சர் அறிவித்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா









