நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் கேள்வியின் எதிரொலியாக கூடிய விரைவில் அரசு
குழந்தைகள் மருத்துவமனையில் புற்றுநோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு
தேவைப்படும் Aphersis என்ற மெஷின் கொண்டுவரப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
மகளிர் சிறப்பு சிறுநீரயியல் மாநாடு மற்றும் தேசிய மருத்துவர்கள் தினத்தை
முன்னிட்டு மருத்துவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழைகளை வழங்கிய பின்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது என எச்சரிக்கை வழங்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. தமிழகத்தில் 2 ஆயிரத்திற்கும் மேலாக பாதிப்பு எண்ணிக்கை உள்ளது. கொரோனா பரவல் வேகமாகி உள்ளதால், இதிலிருந்து தற்காத்து கொள்ள அரசு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என முதல்வர் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்தார். மேலும், 10க்கும் மேற்பட்ட நபர்கள் கூடும் அனைத்து இடங்களிலும் முகக்கவசம் கட்டாயம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும், தடுப்பூசி போடப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியுள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகி இருக்கும். எனவே நாம் கவனமாக இருக்க வேண்டும். மூன்றாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டிய நபர்கள் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் 95% பேர் முதல் தவணை தடுப்பூசியும், 85% பேர் இரண்டாம் தவணையும் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். மேலும், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனையிலும், 18-59 வயதுடையவர்கள் தனியார் மருத்துவமனையிலும் செலுத்தப்பட்டு வருகிறது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருப்பவர்கள் உடனடியாகச் சென்று தடுப்பூசி செலுத்த வேண்டும். வரும் 31 வது மெகா தடுப்பூசி முகாம் 1 லட்சம் இடங்களில் 10 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
அப்போது, புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்ட குழந்தைகளுக்கு பிளேட்லட்ஸ் தேவைப்படும். இந்த பிளேட்லட்ஸ் பிரித்து எடுக்க Aphersis என்ற மெஷின் தேவைப்படும். இந்த மெஷின்
அரசு குழந்தை நல மருத்துவமனையில் கிடையாது. எப்பொழுது கொண்டுவரப்படும் ?
என்று நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் கேள்வி எழுப்பினார். Aphersis மெஷின் சென்னையில் ஏற்கனவே ராஜிவ் காந்தி மருத்துவமனையில் உள்ளது. அதே போல கூடிய விரைவில் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையிலும் கொண்டு வரப்படும் என்று பதிலளித்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

தொடர்ந்து பேசிய அவர் சென்னை மற்றும் மதுரையில் கூடிய விரைவில் IVF க்கான
மையங்கள் அரசு மருத்துவமனையில் திறக்கப்படும். சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் கிணற்றில் மருத்துவக் கழிவு இருப்பதாக
செய்தி வெளியானது தொடர்பாக குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அறிக்கை வந்தவுடன் அது குறித்து தெரிவிக்கப்படும் என்றார்.
மேலும், கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் அதிமுக பொதுக்குழுவில் 2000 த்தும்
மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ள நிலையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு கட்சி தலைமை கூட்டத்தை பாதுகாப்பாக நடத்த வேண்டிய பொறுப்பு உள்ளதாகவும், கட்சி தலைமை தங்கள் நிர்வாகிகளை பாதுகாக்க முறையான முகக் கவசம் அணிய சொல்லி அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது எனவும் அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-மணிகண்டன்







