சென்னை மெட்ரோ ரயில் சேவை விரிவாக்க பணிகளுக்காக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் நிலம் கையகப்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த மெட்ரோ ரயில் சேவை அடுத்தடுத்த கட்டங்களுக்கு விரிபடுத்தப்பட்டு வருகின்றன. சென்னையில் இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் பணிகள் 118.9 கிமீ தொலைவுக்கு நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை அமைக்கப்படும் மெட்ரோ ரயில் வழித்தடத்தில் மொத்தம் 30 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. சுரங்க பாதை மற்றும் உயர்மட்ட வழித்தடம் என இரண்டு விதமாக மெட்ரோ ரயில் வழித்தடம் கலங்கரை விளக்கம் பூந்தமல்லி இடையே அமைக்கப்பட உள்ளது. இந்த வழித்தடத்தில் அமைக்கப்படும் 30 ரயில் நிலையங்களில் பாரதிதாசன் சாலை ரயில் நிலையமும் ஒன்று. கலங்கரை விளக்கம், கச்சேரி சாலை, திருமயிலை, ஆழ்வார்பேட்டை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அடுத்ததாக பாரதிதாசன் சாலை நிலையம் அமைக்கப்பட உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் பாரதிதாசன் சாலை நிலையம் அமைப்பதற்காக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசனுக்கு சொந்தமான இடத்தின் சிறுபகுதி கையகப்படுத்தப்படுவது குறித்த பிரத்யேக தகவல் நியூஸ் 7 தமிழுக்கு கிடைத்துள்ளது. சுற்றுச்சுவர், காலி மனைப்பகுதி எடுக்கப்படுவதாகவும், உரிமையாளர் பெயர் கமலஹாசன் எனவும் மெட்ரோ இரயில் நிறுவன அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை கோயம்பேட்டில் மேம்பாலம் பணிகள் நடைபெற்றபோது தேமுதிக தலைவர் விஜகாந்த்துக்கு சொந்தமான திருமண மண்டபத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழ்நாடு அரசியலில் அனலை கிளப்பிய விஷயமாக சிறிதுகாலம் இந்த விவகாரம் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே சென்னை சிட்லப்பாக்கத்தைச் சேர்ந்த தயானந்த் கிருஷ்ணன் என்பவர் த கவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விகளுக்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் அளித்த பதிலில், சென்னை விமான நிலையம் – கிளாம்பாக்கம் இடையேயான மெட்ரோ ரயில் பணிகள் தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்தால் 2026 இல் முடிவடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் விமான நிலையம் – கிளாம்பாக்கம் இடையேயான மெட்ரோ இரயில் திட்டம் ரூ 4,528 கோடி திட்ட மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்றும் 12 மெட்ரோ இரயில் நிலையங்களுடன் அமைக்கப்படவுள்ள உயர்மட்ட வழித்தடத்தின் உயரம் 12 மீ வரை இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கோவை பெருந்திரள் போக்குவரத்திற்கான முதற்கட்டத்திற்கு ரூ 9,424 கோடி மதிப்பிலான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு அரசின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றால், 2027 இல் பணிகள் நிறைவடையும் என்றும் கூறப்பட்டுள்ளது. மதுரையில் பெருந்திரள் போக்குவரத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.