சென்னையில் 13 வயது சிறுவன் ஒருவன் ஆன்லைன் கேம் விளையாடுவதற்காக ரூ. 12 லட்சத்தை தந்தையிடமிருந்து திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நொலம்பூர் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன், அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் ஆன்லைன் வகுப்புக்காக அந்த சிறுவனுக்கு ஸ்மார்ட்ஃபோன் ஒன்றை அவரது பெற்றோர் வாங்கி கொடுத்துள்ளனர். ஆனால் அந்த சிறுவன் அதை படிப்புக்கு பயன்படுத்தாமல் ஆன்லைனில் கேம் விளையாட பயன்படுத்தி வந்துள்ளார்.
விரைவில் ஆன்லைன் கேம்களுக்கு அடிமையாகியதால் மொபைலில் நெட் ரீசார்ஜ் செய்யவும், கேம்களுக்கு தேவையான பிளகின் (plug in) களை வாங்குவதற்கும் பணம் தேவைப்பட்டது. இதனால், தனது தந்தை லாக்கரில் வைத்திருந்த ரூ.12 லட்சத்தை திருடி ஆன்லைன் கேம் விளையாடுவதற்கு செலவு செய்துள்ளார்.
திடீரென ஒருநாள் லாக்கரில் பணம் இல்லாததை கண்ட அந்த சிறுவனின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், புகார் அளித்தவரின் 13 வயது மகன் இந்த திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
மேலும், ஆன்லைன் கேம் விளையாடுவதற்காக அந்த சிறுவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து சிறிது சிறிதாக ரூ.12 லட்சத்தை திருடியது தெரியவந்தது. அந்த பணத்தை, முகப்பேரில் உள்ள தனியார் நிறுவன ஊழியர் சுகுமார் உதவியுடன் ஆன்லைன் கேம் விளையாடுவதற்காக ரீச்சார்ஜ் செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த சிறுவன், அவரது 3 நண்பர்கள் மற்றும் சுகுமார் ஆகியோரிடம் நொலம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.







