முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தேர்தல் 2021 தமிழகம்

உதயநிதி ஸ்டாலின்: மக்களின் ‘நண்பேன்டா’


எல்.ரேணுகா தேவி

கட்டுரையாளர்

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அனைத்து தரப்பட்ட மக்களை சென்றடைந்த வேட்பாளர் என்றால் அது திமுக இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின்தான்.

தன்னுடைய முதல் அரசியல் பிரவேசத்திலேயே சேப்பாக்கம் திருவெல்லிக்கேணி தொகுதியில் 68,133 வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றிபெற்றுள்ளார். தமிழகத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர் பட்டியலில் 7-வது இடம்பிடித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

திமுகவின் நவீனகால பிரச்சார பீரங்கி

தமிழக தேர்தலில் முதல் முறையாக களமிறங்கிய உதயநிதி ஸ்டாலின் தான் போட்டியிடும் தொகுதியில் மட்டும் பிரச்சாரம் மேற்கொள்ளாமல், திமுகவில் உள்ள முக்கிய கட்சி தலைவர்கள் போல் மாநிலம் முழுவதும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரங்களை மேற்கொண்டார். உதயநிதியின் இந்த செயல் அவரை திமுக கழகத்தின் முக்கிய உறுப்பினர் என்பதை எடுத்துக்காட்டியது.

தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்ட இடமெல்லாம் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். பிரச்சாரங்களில் அவர் பேசும் அரசியல் விமர்சனங்கள், மக்கள் பிரச்சினைகள், மாநிலத்தின் உரிமை உள்ளிட்டவை எளிய மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் அமைந்தது.

அதேபோல் சமூக வலைத்தளங்களில் உதயநிதியின் பிரச்சாரங்களை அதிகளவு கவனம் ஈர்க்கப்பட்டது. குறிப்பாக மதுரையில் எய்ம்ஸ் மருத்துமனை குறித்து மத்திய அரசை விமர்சனம் செய்ய உதயநிதி செயல்படுத்திய ”செங்கல் ” யுக்தி அவரை இந்தியளவில் டிரெண்டிங்கில் கொண்டு சென்றது.

கலைஞரின் பாசமிகு பேரன்

உதயநிதியின் அரசியல் பயணம் என்பது ஏதோ இன்றோ நேற்றோ நடந்தது கிடையாது. அது அவருடைய பிறப்பிலிருந்தே தொடங்கிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். 1976-ம் ஆண்டு மிசா சட்டத்தின் கீழ் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டு மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது உதயநிதியைக் கருவில் சுமந்திருந்தார் துர்கா ஸ்டாலின். அரசியல் பரபரப்பான சூழ்நிலையில்தான் உதயமானார் உதயநிதி.

கருணாநிதிதான் உதயநிதி என்ற பெயரை வைத்தார். கழகமே குடும்பமாகச் செயல்பட்ட கோபாலபுரம் வீட்டில் உதயநிதி அரசியல் பேச்சுகளுக்கு நடுவில்தான் வளர்ந்தார்.உதயநிதி சிறுவனாக இருந்தபோது தந்தை ஸ்டாலினுடன் பல அரசியல் கூட்டங்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

திரையுலக நுழைவு

சென்னை லயோலா கல்லூரியில் விஷ்வல் கம்யூனிகேஷன் படித்துள்ள உதயநிதி ஸ்டாலின். பிறகு அமெரிக்காவில் எம்.பி.ஏ படிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய உதயநிதி புதுவிதமான விளையாட்டான பவுலிங் விளையாட்டைச் சென்னையில் அறிமுகப்படுத்தினார்.


திரைத்துறையில் நுழைவதற்கு முன்பு தன்னுடைய தொழில்களில் கவனத்தைச் செலுத்திவந்தார். தனது இளங்கலை படிப்பின்போது தன்னுடன் படித்த கிருத்திகாவைக் காதலித்து பெற்றோரின் சம்பந்தத்துடன் அவரை கரம் பிடித்தார். தற்போது இவர்களுக்கு இன்பநிதி, தன்மயா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். கிருத்திகா உதயநிதி தமிழ் சினிமாவில் இயக்குநராக பணியாற்றி வருகிறார்.

உதயநிதி முதன் முதலில் 2008-ம் ஆண்டு ரெட் ஜெயின்ட் மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். உதயநிதிக்கு நடிகர் விஜய்தான் மிகவும் பிடித்த நடிகர். இதன் காரணமாக தான் தயாரிக்கும் முதல் படத்தில் நடிகர் விஜய் நாயகனாக நடிக்க இயக்குநர் தரணி இயக்கத்தில் ‘குருவி’ படத்தை வெளியிட்டார்.

இதனையடுத்து திரைப்படங்களை விநியோகிக்கும் மற்றொரு களத்தைத் தேர்ந்தெடுத்தார் உதயநிதி. ரெட் ஜெயின்ட் மூவிஸ் தயாரித்து வெளியிட்ட படங்களைவிட விநியோகிப்பதற்காக வாங்கிய படங்கள் வணிக ரீதியிலும் மக்கள் மனதிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

குறிப்பாக விண்ணைத்தாண்டி வருவாயா, மதராஸ் பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன் , மைனா, ஏழாம் அறிவு, ‘கோ’ என உதயநிதி வாங்கி விநியோகித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் படங்களாக வெற்றிபெற்றன. இதையடுத்து தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத நபராக வலம் வரத் தொடங்கினார் உதயநிதி.

இயக்குநர் ராஜேஷ் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக அறிமுகமான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். உதயநிதியின். இந்த முதல் படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. நடிகர் சந்தானத்துடன் இனைந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளியான ‘இது கதிர்வேலன் காதல்’, நண்பேன்டா போன்ற படங்கள் நகைச்சுவை திரைப்படங்களாக வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து வெளியான ‘மனிதன்’ படம் உதயநிதிக்கு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை நடிகராக பெற்று தந்தது.

சினிமா என்ற பெரியத் திரை உதயநிதிக்கு மக்கள் மனதில் பெரும் செல்வாக்கை ஏற்படுத்திக்கொடுத்தது. திரைப்படங்களில் கவனம் செலுத்திகொண்டே அரசியல் களத்திலும் உதயநிதியின் பெயர் அடிப்படத் தொடங்கியது. திமுக அரசியல் குடும்பத்தில் பிறந்த காரணத்தால் உதயநிதி எப்போது அரசியலுக்கு வருவார் என்ற கேள்வி அவரின் அனைத்து பேட்டிகளிலும் தவறாமல் இடம்பெற்றது.

அந்த கேள்விகளுக்கு நடிப்பு மட்டும்தான் என் தொழில், அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனக்கில்லை எனக் கூறிவந்தார். அதற்கேற்றார்போல் உதயநிதியின் ரசிகர் மன்றங்கள் அனைத்தும் நற்பணி மன்றங்கள் என அழைக்கப்பட்டது. தன்னுடைய நற்பணி மன்றங்கள் வாயிலாக கஜா புயலின் போது பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.

திமுகவின் இளம் தீப்பொறி

திரைத்துறையில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தபோதும் சமூக வலைத்தளங்களில் அரசியல் நையாண்டிகளில் ஈடுபட்டுவந்தார். அதேநேர உதயநிதிக்கு எதிராகவும் பல கருத்துகள் வலைத்தளங்களில் பகிரப்பட்டது. மூன்றாம் கலைஞர் என உதயநிதியை முன்னிறுத்தி அடிக்கப்பட்ட போஸ்டர் மிகுந்த சர்ச்சைக்குள்ளானது. இந்த போஸ்டர் குறித்து தொண்டர் ஒருவர் பதிவிட்ட கருத்துக்கு பதிலளித்த உதயநிதி இத்தகைய தவறு மீண்டும் நடக்காது எனப் பகிரங்கமாகத் தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தபோது அவர் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடப் போவதாகத் தகவல் வெளியானது. இதனை முற்றிலுமாக மறுத்த உதயநிதி நான் எப்போதும் அரசியலில் இறங்கப்போவதில்லை என்று திட்டவட்டமாக கூறினார்.

ஆனால் 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிட்ட பெரம்பூர் தொகுதியில் தந்தைக்காகத் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அதே போன்று திமுக மூத்த தலைமுறை முக்கிய தலைவரான அன்பில் பொய்யாமொழியின் மகனும் ,உதயநிதியின் நண்பருமான மகேஷ் பொய்யாமொழிக்கு தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

பின்னர் திமுகவின் அரசியல் கூட்டங்களில் பங்கெடுப்பது. அதேபோல் ஸ்டாலின் பிறந்தநாளின் போது கட்சியின் கொடியை ஏற்றியதோடு மட்டுமல்லாமல் அந்நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலினுக்கு வீரவாள் வழங்கப்பட்டது நிகழ்வுகள் அவரின் அரசியல் வருகையை உறுதி செய்தன.

திமுகவின் அடிமட்ட தொண்டன்

திமுக ஒரு வாரிசு கட்சி என்ற விமர்சனங்களை உடைத்தெறிய தன்னால் முடிந்த அனைத்து வேலைகளையும் செய்தார் உதயநிதி. ‘திமுகவின் அடிமட்ட தொண்டனைப் போல் உழைத்து பணியாற்ற வாய்ப்பு கொடுங்கள்’ எனக் பகிரங்கமாக கூறினார்.

அதற்கேற்றாற்போல் திமுக உறுப்பினர்கள் சட்டமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்குபெற்றார். தொடர்ச்சியாக திமுக போராட்டங்களில் உதயநிதி ஸ்டாலினை அடிக்கடி பார்க்கமுடிந்தது. குறிப்பாகப் பிரதமர் மோடி தமிழகம் வருவதைக் கண்டித்து கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் கடலூரில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்பாது கருப்பு சட்டை அணிந்துகொண்டு கருணாநிதியிடம் வாழ்த்து பெற்றுச் சென்ற வீடியோ வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

அதேபோல் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் அண்ணாசாலை முதல் எழிலகம் வரை பேரணியை வழிநடத்திச் சென்றார். திமுகவின் அடிமட்ட தொண்டனில் நானும் ஒருவன் என்பதை உதயநிதி மேற்கொண்ட இந்த பேரணி மக்கள் மனதில் உதயநிதி நடிகர் என்பத்தைத்தாண்டி திமுகவின் மற்றொரு இளம் தீப்பொறி என்ற பிம்பத்தை ஆழமாகப் பதியவைத்தது.

உதயநிதியின் அரசியல் வருகை அரசியல் தளத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. திமுகவின் தேர்தல் பரப்புரையில் புயலாகச் செயல்படத் தொடங்கினார் உதயநிதி. பிரச்சாரத்துக்காக உதயநிதி தேர்ந்தெடுத்த இடம் கலைஞர் பிறந்த ஊரான திருவாரூர். “கலைஞர் பிறந்த இடத்தில் பிரச்சாரம் தொடங்கி அதே இடத்திலே கைது செய்யப்பட்டது எனக்குப் பெருமையாக உள்ளது.

இதைப் பார்க்கக் கலைஞர் இல்லை. இருந்திருந்தால் பெருமைப்பட்டிருப்பர். இது மக்கள் பயணம், எத்தனை தடைகள் வந்தாலும் தொடர்ந்து செல்ல திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்” என உதயநிதியின் பேச்சு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பிரச்சாரத்தின்போது ஆதினங்கள் வைக்கும் திருநீறை கலைக்காமல் வைத்துக்கொள்வது, ஜமாத்தார்களுடன் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்குபெறுவது என உதயநிதியின் மதசார்பற்ற நடவடிக்கைகள் பெரிதும் கவனிக்கப்பட்டது. களத்தில் மட்டுமல்லாது சமூகவலைதளங்களில் தான் படித்த புத்தகங்கள் குறித்து கருத்து பகிர்வது ,அதன் எழுத்தாளரை பாராட்டுவது , சமூகவலைதளங்களில் அவ்வப்போது அரசியல் பகடி செய்து டிரெண்டிங்கில் நிற்பார்.

மக்களின் நம்பிக்கை பெற்ற இளம் அரசியல்வாதி

கலைஞரின் மறைவுக்குப் பிறகு சோர்ந்திருந்த கழக தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலினின் வருகை பெரும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது. இன்றைய இளைஞர்களுக்கு அரசியலில் ஆர்வம் இல்லை என்ற கருத்துக்கு நேர்மாறாக உதயநிதி பங்குபெறும் கூட்டங்களில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் திரள்வதைக் காணமுடிந்தது.

ஆட்சியில் உள்ளவர்கள் செய்யும் தவறுகளை மக்களுக்குப் புரியும்வகையில் எந்தவிதமான அடுக்கு மொழி வசனங்களும் இல்லாமல் எளிய மொழி நடையில் சாதாரணமாகப் பேசுகிறார் உதயநிதி. அவரின் இந்த இயல்பான மற்றும் நிதானமான பேச்சுதான் இன்றைய தலைமுறை இளைஞர்களை அவர் பக்கம் ஈர்த்துள்ளது.

அடிமட்ட தொண்டர்களுக்கு அரசியல் கற்பிக்கும் பெரும்பாலான கட்சித் தலைவர்கள் தங்களுடைய அரசியலை குடும்ப அமைப்பிற்குள் கொண்டு செல்வதில்லை. இதற்கு நேர்மாறாக மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தன்னுடைய குடும்பத்தையே கழகமாக மாற்றினார். குடும்ப உறுப்பினர்களில் அரசியல் ஆர்வம் உள்ளவர்களுக்கு அரசியல் வழிகாட்டியாகச் செயல்பட்டார். முரசொலி மாறன், தயாநிதி மாறன், மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், கனிமொழி எனத் தொடங்கிய இந்த பயணம் தற்போது உதயநிதியிடம் வந்தடைந்துள்ளது.

உதயநிதியின் அரசியல் ஆர்வத்துக்கும் மக்கள் மத்தியில் அவருக்கு இருந்த வரவேற்பு உதயநிதியை தமிழக அரசியலின் மையத்தில் தவிர்க்க முடியாத நபராக்கியது. இதனைத்தொடர்ந்து சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட கட்சியிடம் முறையாக விண்ணப்பம் செய்தார் அவர்.

உதயநிதிக்கு மக்கள், இளைஞர் மத்தியில் உள்ள வரவேற்புக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக திமுகவின் 2021 தேர்தல் வேட்பாளர் பட்டியலில் உதயநிதி ஸ்டாலின் பெயர் இடம்பெற்றது. அவருக்கு சேப்பாக்கம் திருவெல்லிகேணி ஒதுக்கப்பட்டது.

திமுகவின் இந்த அறிவிப்பு கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தன்னை வேட்பாளராக அறிவித்த பிறகு தமிழக அரசியல் கட்சியின் மூத்த தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் உதயநிதி. அவரின் இந்த செயல் எதிர்கட்சி அரசியல் தலைவர்களையும் கவர்ந்தது.

அரசியல் களத்தில் அனுபவமிக்க ஆளுமைபோல் மக்களின் நிகழ்கால பிரச்சினைகளை முன்னிருத்தி பிரச்சாரம் மேற்கொண்டார். உதயநிதி சென்ற இடமெல்லாம் தொண்டர்கள் ரசிகர்களை போல் அவரை வரவேற்றனர். திமுக வாரிசு அரசியல் கட்சி என்ற விமர்சனத்தை தன்னுடைய குறுகிய கால அரசியல் உழைப்பால் உடைத்தெறிந்துள்ளார் உதயநிதி. அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற உதயநிதி, வெற்றி பெற்றதும் திரையுலகின் முன்னோடியும், தேமுதிகவின் தலைவருமான விஜயகாந்தை சந்தித்தது,அரசியல் கட்சி தலைவர்களான வைகோ ,திருமாவளவன்,திராவிட இயக்க தலைவர் கி.வீரமணி , எம்பி கனிமொழி உள்ளிட்டோரை சந்தித்து வாழ்த்து பெற்றதும் அனைவரது கவனத்தையும் ஈர்க்க வைத்தது .

திரைப்பட தயாரிப்பாளர், நடிகர், திமுகவின் அடுத்த அரசியல் வாரிசு என பல பிம்பங்கள் தாண்டி தற்போது மக்களின் பிரச்சினைகளை பேசும் ஒரு இளம் மக்கள் பிரிதிநிதியாக என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் விதைத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். அந்த நம்பிக்கையை சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் நிரூபிக்கவேண்டும் என அவருக்கு வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை: அமைச்சர்

EZHILARASAN D

போதை ஆசாமியை பிடிக்க முயன்ற காவலருக்கு கத்தி குத்து

G SaravanaKumar

தூத்துக்குடியில் சீமான் பரப்புரை!

Halley Karthik