திருவள்ளூர் அருகே விவாகரத்து வழக்கிற்காக வந்த பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து, பணம் பறித்துவந்த வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் விவாகரத்து பெறுவதற்காக அதேப் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் டார்ஜன் என்பவரை அணுகியுள்ளார். அப்போது ஆவணங்களை வீட்டுக்கு கொண்டுவருமாறு கூறியதையடுத்து அந்த பெண் மணவாளநகரில் உள்ள வழக்கறிஞரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானம் அளிக்கப்பட்டுள்ளது. அதனை பருகிய சிறிது நேரத்தில் அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரை நிர்வாணமாக்கி புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் அந்த வழக்கறிஞர், அந்த பெண்ணிடம், “உன்னை நிர்வாணமாக படம் எடுத்துள்ளேன், அந்த படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றாமல் இருக்க வேண்டுமானால் பணம் தர வேண்டும்” என மிரட்டி சுமார் 3 லட்சம் வரை பறித்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் அடிக்கடி பாலியல் தொந்தரவும் அளித்துள்ளார். இதற்கு வழக்கறிஞரின் மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார். இதனை அடுத்து ஒரு கட்டத்தில் அந்த பெண், திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார் வழக்கறிஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.