தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே இந்தியப் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது. இன்று (நவம்பர் 5) சென்செக்ஸ் 2,116 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த நிலையில், நிஃப்டியும் 2.5 சதவீதம் ஏற்றம் கண்டது. இதன் மூலம் ஒரே நாளில் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ.8.20 லட்சம் கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை சரிவு, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் தொடர் முதலீடு மற்றும் அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகளால் மேம்பட்ட சர்வதேசச் சந்தைச் சூழல் ஆகியவை இந்த அதிரடி ஏற்றத்துக்கு முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன.
2,100 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!
இன்று (நவம்பர் 5) வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 2,116.98 புள்ளிகள் அல்லது 2.74 சதவீதம் உயர்ந்து 79,418.38 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசியப் பங்குச்சந்தையின் நிஃப்டி 609 புள்ளிகள் அல்லது 2.5 சதவீதம் உயர்ந்து 24,570.45 புள்ளிகளை எட்டியது. இதன் மூலம் இந்தியப் பங்குச்சந்தை தொடர்ந்து 6-வது வர்த்தக நாளாக ஏற்றத்தைக் கண்டுள்ளது. நேற்று (நவம்பர் 4) சென்செக்ஸ் 383.55 புள்ளிகள் உயர்ந்து 77,301.40 புள்ளிகளிலும், நிஃப்டி 149.75 புள்ளிகள் உயர்ந்து 23,960.60 புள்ளிகளிலும் நிறைவடைந்திருந்தன. கடந்த 5 வர்த்தக நாட்களில் மட்டும் சென்செக்ஸ் 4,000 புள்ளிகளுக்கு மேல், அதாவது சுமார் 5 சதவீதம் உயர்ந்திருந்த நிலையில், இன்றைய வர்த்தகமும் முதலீட்டாளர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை சரிவு!
இந்தியப் பங்குச்சந்தையின் ஏற்றத்துக்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாக கச்சா எண்ணெய் விலை சரிவு பார்க்கப்படுகிறது. சர்வதேசச் சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 95 டாலருக்குக் கீழும், அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் விலை 90 டாலருக்குக் கீழும் சரிந்தது. பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.53 சதவீதம் குறைந்து 94.12 டாலராகவும், WTI கச்சா எண்ணெய் விலை 0.69 சதவீதம் குறைந்து 87.51 டாலராகவும் இருந்தது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் பெரும்பகுதியை இறக்குமதி செய்வதால், சர்வதேசச் சந்தையில் எண்ணெய் விலை குறைவது நாட்டின் பொருளாதாரத்துக்கும், பணவீக்கத்துக்கும் சாதகமானதாகப் பார்க்கப்படுகிறது. இதனால் பங்குச்சந்தையிலும் முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.
இரண்டு வார உச்சத்தைத் தொட்ட இந்திய ரூபாய்!
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து 5-வது வர்த்தக நாளாக உயர்ந்துள்ளது. இன்று (நவம்பர் 5) காலை வர்த்தகத்தில் ரூபாயின் மதிப்பு 94.35 ஆகத் தொடங்கி, பின்னர் 94.32 ஆக உயர்ந்தது. இது கடந்த இரண்டு வாரங்களில் காணப்பட்ட வலுவான நிலையாகும். முந்தைய நாள் வர்த்தகத்தில் ரூபாயின் மதிப்பு 95.64 ஆக இருந்தது. இதற்கிடையே, அமெரிக்க டாலரின் வலிமையை அளவிடும் டாலர் குறியீடும் 0.53 சதவீதம் சரிந்து 101.18 ஆக இருந்தது. ரூபாயின் மதிப்பு உயர்ந்ததும், டாலர் குறியீடு சரிந்ததும் இந்தியச் சந்தையின் முதலீட்டாளர் நம்பிக்கைக்கு கூடுதல் ஆதரவாக அமைந்துள்ளது.
பல துறைகளிலும் பங்குகள் ஏற்றம்!
இன்று (நவம்பர் 5) பங்குச்சந்தையின் ஏற்றம் குறிப்பிட்ட சில நிறுவனங்களுடன் நின்றுவிடாமல் பல்வேறு துறைகளிலும் எதிரொலித்தது. முக்கியமான 16 துறை சார்ந்த குறியீடுகளில் 14 குறியீடுகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகளும் தலா 1 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தன. நிஃப்டி மிட்கேப் 100 குறியீடு 1.46 சதவீதமும், நிஃப்டி ஸ்மால்கேப் 100 குறியீடு 1.49 சதவீதமும் உயர்ந்தன. துறை வாரியான ஏற்றத்தில் நிஃப்டி பிரைவேட் வங்கி குறியீடு 2.55 சதவீதம் உயர்ந்து முதலிடத்தைப் பிடித்தது. நிஃப்டி ரியாலிட்டி 1.92 சதவீதமும், நிஃப்டி ஐடி 1.72 சதவீதமும், நிஃப்டி ஆட்டோ 1.66 சதவீதமும் உயர்ந்தன. நுகர்வோர் சாதனங்கள் துறை 1.52 சதவீதமும், மீடியா துறை 1.36 சதவீதமும், எஃப்எம்சிஜி துறை 1.08 சதவீதமும் ஏற்றம் கண்டன.
இந்தியப் பங்குச்சந்தையின் தற்போதைய ஏற்றம் முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தை அளித்தாலும், இந்த ஏற்றம் தொடர்ந்து நீடிக்குமா என்பதைக் கவனிக்க வேண்டும் எனச் சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.




