ஹார்முஸ் நீரிணையில் இந்தியாவுக்கு ஈரான் அனுமதி! மற்ற நாடுகளுக்குக் கட்டுப்பாடு!

ஹார்முஸ் நீரிணையில் செல்ல இந்தியக் கப்பல்களுக்கு ஈரான் விலக்கு அளித்துள்ளது. இதனால் எரிபொருள் இறக்குமதி, பிராந்திய வர்த்தகத்துக்கு இது சாதகமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

மத்திய கிழக்கில் தொடர்ந்து நீடித்து வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், முக்கிய கடல்வழிப் பாதையான ஹார்முஸ் நீரிணையில் இந்தியா, சீனா உள்ளிட்ட 4 நாடுகளின் வணிகக் கப்பல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த போக்குவரத்துக் கட்டுப்பாடுகளில் இருந்து ஈரான் விலக்கு அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஈரானின் இந்த முடிவு இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்தியா, சீனா உள்ளிட்ட 4 நாடுகளுக்கு விலக்கு!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்களுக்கு ஈரான் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், இந்தியா, சீனா, ஈராக் மற்றும் கத்தார் ஆகிய 4 நாடுகளின் கப்பல்களுக்கு அந்தக் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக ஈரான் நாடாளுமன்றத்தின் தேசியப் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் அமீர் ஹயாத் மொகதாம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஈரானின் அரை அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, இந்த 4 நாடுகளின் கப்பல்களும் ஹார்முஸ் நீரிணை வழியாகச் சுதந்திரமாகச் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. அமெரிக்கக் கடற்படையும் அந்தக் கப்பல்களை இடைமறிப்பதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இந்தியக் கப்பல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதன் மூலம், இந்தியாவிலிருந்து மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வழிவகை ஏற்படும் என்றும், சீனக் கப்பல்களுக்கு அளிக்கப்பட்ட விலக்கு அந்நாட்டின் அரசியல் ஆதரவைப் பெறுவதற்கான நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

இந்தியாவின் எரிசக்தித் தேவைகளில் மத்திய கிழக்கு நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இறக்குமதிக்கு இந்தப் பிராந்தியத்தின் கடல்வழிப் போக்குவரத்து மிகவும் அவசியமாக உள்ளது. இந்தச் சூழலில், இந்திய வணிகக் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணை வழியாகப் பயணிக்க ஈரான் அனுமதி அளித்திருப்பது இந்தியாவின் எரிசக்தி இறக்குமதி மற்றும் சர்வதேச வர்த்தகத்துக்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இருப்பினும், இந்தியக் கப்பல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பதற்காகக் கட்டணமின்றிப் பயணிக்கலாம் என்று அர்த்தமில்லை. ஈரான் அளித்துள்ள இந்தச் சலுகை, நீரிணை வழியாகச் செல்ல அனுமதி வழங்குவது தொடர்பானதே தவிர, போக்குவரத்துக் கட்டணங்களை முழுமையாக ரத்து செய்வது தொடர்பானது அல்ல என்று ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, இந்தியக் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையைக் கடக்கும்போது போக்குவரத்துக் கட்டணங்களைச் செலுத்த வேண்டிய நிலை தொடரலாம் எனக் கூறப்படுகிறது.

சீனா, கத்தார், ஈராக்குக்கு என்ன முக்கியத்துவம்?

இந்தப் பட்டியலில் சீனா இடம்பெற்றிருப்பது ஈரான் – சீனா இடையிலான முக்கியமான பொருளாதார மற்றும் அரசியல் உறவை வெளிப்படுத்துகிறது. ஈரானின் கச்சா எண்ணெயை அதிக அளவில் வாங்கும் நாடுகளில் சீனாவும் ஒன்றாகும். மேலும், ஈரானுக்கு பொருளாதார மற்றும் ராஜதந்திர ரீதியிலான ஆதரவையும் சீனா வழங்கி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவைப் பாதுகாக்கும் நோக்கில் சீனக் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல், உலகின் முக்கிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதி நாடுகளில் ஒன்றான கத்தார், வளைகுடா கடல்வழிப் போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஈராக்கைப் பொறுத்தவரை, அந்நாட்டின் பாதுகாப்பும் அரசியல் ஸ்திரத்தன்மையும் ஈரானின் பிராந்திய நலன்களுடன் நெருங்கிய தொடர்புடையவை. இதன் காரணமாகவே இந்த இரு நாடுகளுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

ஹார்முஸ் நீரிணையில் தொடரும் போக்குவரத்துப் பாதிப்பு!

பாரசீக வளைகுடாவையும் ஓமன் வளைகுடாவையும் இணைக்கும் முக்கியமான கடல்வழிப் பாதையாக ஹார்முஸ் நீரிணை விளங்குகிறது. உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் இயல்பான சூழலில் சுமார் 20 சதவீதம் இந்த நீரிணை வழியாகவே நடைபெறுகிறது. இதனால் உலகின் மிக முக்கியமான எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்தது. இதற்குப் பதிலடியாக ஈரானும் தாக்குதல்களை நடத்தியது. இதையடுத்து, ஹார்முஸ் நீரிணையை மூடும் நடவடிக்கையில் ஈரான் இறங்கியது. இதற்குப் பதிலடியாக, சில வாரங்களுக்குப் பிறகு ஈரான் துறைமுகங்கள் மீது அமெரிக்கா கடற்படை முற்றுகையை ஏற்படுத்தியது. இதனால் அந்த நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களின் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஈரான் சில கப்பல்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கி வரும் நிலையில், மற்ற கப்பல்கள் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதுடன், சில சந்தர்ப்பங்களில் போக்குவரத்துக் கட்டணங்களும் வசூலிக்கப்படுகின்றன.

தாக்குதல்களில் 15 இந்திய மாலுமிகள் உயிரிழப்பு!

மத்திய கிழக்கில் போர் தொடங்கிய பிப்ரவரி மாதம் முதல், அப்பகுதியில் வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் இதுவரை குறைந்தது 15 இந்திய மாலுமிகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சமீபத்தில் (நவம்வர் 2 ) அன்று மாலை ஓமன் நாட்டின் லிமா (Limah) அருகே MSV Al Jusufi என்ற வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தத் தொடர் சம்பவங்கள் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. மேலும், மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களுக்கு பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகள் மூலமாகத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

வணிகக் கப்பல்கள் மற்றும் பொதுமக்களுக்கான உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், சர்வதேசச் சட்டங்களுக்கு உட்பட்டு சர்வதேச நீர்வழிகளில் தடையற்ற கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தகம் மீண்டும் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.