கோவை பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் தொடர்பாக எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுப்பிய புகார்கள் தொடர்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் இன்று (நவம்பர் 6) காலை தெரிவித்திருந்தார். இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக பல்வேறு தலைவர்களும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பெரியார் அறிவுலகத்திற்கு போலி நூல்களை விநியோகித்து கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றிருப்பதாக எழுந்திருக்கும் புகார், அறிவை வளர்க்க வேண்டிய நூலகங்களை, போலி நூல்கள் ஆக்கிரமித்திருப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
கோவையில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்திற்கு, இல்லாத பதிப்பகங்களின் பெயரில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டிருப்பதாகவும், இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
அறிவையும், பகுத்தறிவையும் வளர்க்க வேண்டிய நூலகத்தில் நடைபெற்றிருக்கும் முறைகேடை சாதாரணமாக கடந்து செல்லாமல், இல்லாத பதிப்பகத்தில் நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டது எப்படி ? அதற்கான ஆணையை பிறப்பித்தது யார்? நூல்களை பரிசோதித்து அங்கீகாரம் வழங்கியது யார் ? என நூல்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டதில் தொடங்கி பணப்பரிவர்த்தனை வரை தொடர்புடையவர்கள் ஒவ்வொருவரையும் விசாரிக்க வேண்டும்.
எனவே, பெரியார் அறிவுலகத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக எழுந்திருக்கும் புகாரை தனி விசாரணைக் குழு அமைத்து உண்மைகளை வெளிக்கொண்டுவருவதோடு, இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் எந்தவித பாரபட்சமுமின்றி கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டும். அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களில் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு போலி நூல்கள் இருக்கும் பட்சத்தில் அதனை அகற்றிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டிட வேண்டும் எனவும் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




