“தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை!” – கமல்ஹாசன் கண்டனம்!

கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்த மோசடியை அம்பலப்படுத்தியதற்காக எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரத்தில், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுக் கட்டப்பட்ட பெரியார் அறிவுலகம் நூலகத்தின் புத்தகக் கொள்முதலில் ஊழல் நடைபெற்றிருப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் தனது கட்டுரை ஒன்றில் எழுதியுள்ளார். இந்த விவகாரம் தமிழகத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அவர் மேலும் பல தரவுகளையும் வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், பெரியார் அறிவுலகத்தின் புத்தகக் கொள்முதலில் ஊழல் புகார் எழுந்ததையடுத்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் எழுத்தாளர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான கமல்ஹாசன், “தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை” என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:

“தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை. இத்தகைய போலியான நூல்கள் நீண்ட கால அடிப்படையில் மாபெரும் தீங்குகளை விளைவிக்கும். இவற்றை வாசித்து, குறிப்பெடுத்து, அவை பேச்சிலும் எழுத்திலும் ஆய்விலும் இடம்பெற்றால் தமிழின் மானம் கப்பலேறிவிடும். இந்தக் காரியத்தை எவர் செய்திருந்தாலும் அவர்கள் தமிழுக்குத் துரோகம் இழைத்தவர்கள்.

இந்தப் போலி நூல்கள், அனைத்து நூலகங்களில் இருந்தும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு வீதியில் கொட்டி எரிக்கப்பட வேண்டும். மோசடி செய்த பதிப்பகங்கள் சீல் வைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த மோசடியை அம்பலப்படுத்தியதற்காக எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.