ரஜினி வீட்டிற்கு அருகில் வீடு கட்டிய தனுஷ்; பெற்றோருடன் நடந்த புதுமனைப் புகுவிழா

நடிகர் தனுஷ் சென்னை போயஸ் கார்டனில் கட்டி வந்த புதிய பிரம்மாண்ட வீட்டின் பணி முடிவடைந்து, நேற்று தனது பெற்றோர் மற்றும் மகன்களுடன் இணைந்து, புது வீட்டின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். இந்த…

நடிகர் தனுஷ் சென்னை போயஸ் கார்டனில் கட்டி வந்த புதிய பிரம்மாண்ட வீட்டின் பணி முடிவடைந்து, நேற்று தனது பெற்றோர் மற்றும் மகன்களுடன் இணைந்து, புது வீட்டின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். இந்த நிகழ்வு குறித்த சில புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தமிழ் திரைப்படங்களில் மட்டும் இல்லாமல் ஹிந்தி, ஹாலிவுட் என பல மொழிகளிலும் நடித்து பன்முக கலைஞராகவும் வளம் வருபவர். கடந்தாண்டு இவர் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், கடந்த வாரம் வெளியான ‘வாத்தி’ படத்தின் ட்ரைலருக்கும் நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வருகிறது.

இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் போயஸ் கார்டனில் புதிதாக வீடு கட்டும் பணியை தொடங்கினார். இந்த வீட்டுக்கு அஸ்திவாரம் அமைத்தது முதலே, இது தொடர்பான தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வந்த நிலையில், தற்போது தனுஷின் புதிய வீட்டிற்கான பணிகள் அனைத்தும் முடிந்து சமீபத்தில் கிரகபிரவேஷமும் நடைபெற்றுள்ளது.

இதன் மூலம் தனது நீண்டநாள் கனவை நிறைவேற்றிய தனுஷ், இவ்விழாவை தன் குடும்பத்தினருடன் இணைந்து நடத்தியுள்ளார். மேலும் இவ்விழாவில், நடிகர் தனுஷ், அவரது ரசிகர்களில் சிலரை அவர்களது குடும்பத்தினருடன் வர வைத்து, அவர்களுக்கு பரிசுகளையும் வழங்கியதோடு, தடபுடலாக அவர்களுக்கு விருந்தும் வைத்து, இறுதியாக
அவர்களுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டதாராம்.

தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வரும் நிலையில் தனுஷின் ரசிகர் மன்ற தலைவரும் இயக்குநருமான சுப்ரமணியன் சிவா தன்னுடைய சமூகவலைதளத்தில் தனுஷ் தனது பெற்றோருக்கு புதிய வீடு ஒன்றை வாங்கி கொடுத்திருப்பதாக பதிவிட்டு இருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்

தம்பி தனுஷின்
புதிய வீடு…
கோவில் உணர்வு
எனக்கு..

வாழும் போதே
தாய்,தந்தையை
சொர்கத்தில் வாழ
வைக்கும் பிள்ளைகள்,
தெய்வமாக
உணர படுகிறார்கள்…

மேலும்,
தன் பிள்ளைகளுக்கும்,
மற்றவர்களுக்கும்,
எடுத்துகாட்டாகவும்,
உதாரணமாகவும்,
உயர்ந்து விடுகிறார்கள்..

இன்னும்
பல வெற்றிகளும்
சாதனைகளும்
உன்னை துரத்தட்டும்,
உன்னை பார்த்து ஏங்கட்டும்,
உன்னை கண்டு வியக்கட்டும்,

வாழ்க தம்பி,
வாழ்வாங்கு வாழ்க..

என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவும் தற்போது வைரலாகி வரும் நிலையில், நடிகர் தனுஷிற்கு பாராட்டுகளும்,வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.