திண்டிவனத்தில் பெற்றோர் இல்லாத 14 வயது சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை பலரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டிவனம் அடுத்த செண்டூர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாய், தந்தை இருவருமே இறந்துவிட்ட நிலையில் அதே ஊரில் வசிக்கும் அத்தை பாக்யலட்சுமி வீட்டில் தங்கி வந்துள்ளார். அங்கிருந்தபடியே சிறுமி பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில்தான், அச்சிறுமிக்கு கொடூர சம்பவம் நடந்துள்ளது.
பாக்யலட்சுமியின் மகன் சிவாவிற்கு திருமணமாகி ஏழு மாதங்களே ஆன நிலையில் தனது வீட்டில் தங்கியிருந்த 14 வயதேயான சிறுமியின் மீது சிவாவின் தவறான பார்வை விழுந்துள்ளது. தொடர்ச்சியாக சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த சிவா, ஒருகட்டத்தில் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், நடந்தவற்றை வெளியில் கூறினால் உணவில் விஷம் வைத்துக் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதுடன் தொடர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதன் விளைவாக அச்சிறுமி கர்ப்பமானார்.
இந்நிலையில், சிறுமி பள்ளியில் சோர்வாக இருப்பதையும் அவ்வப்போது மயங்கி விழுந்ததையும் கண்ட பள்ளி நிர்வாகம் இதுகுறித்து மாணவியிடம் விசாரணை செய்தனர். அப்போது அவர்களுக்கு பல அதிர்ச்சி தரும் உண்மைகள் தெரிய வந்தன. இதையடுத்து தனியார் பள்ளி நிர்வாகம் தரப்பில் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சிறுமியை மிரட்டி சிவா அவரை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. இதனையடுத்து, சிவாவை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.







