பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள ‘எல் நினோ’ காலநிலை மாற்றம் காரணமாக, இந்தியாவின் தென்மேற்குப் பருவமழை நடப்பாண்டில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் இதுவரை பெய்ய வேண்டிய மழையின் அளவு சுமார் 43 சதவீதம் குறைவாகவே பதிவாகியுள்ளது. இந்தச் சூழ்நிலையைச் சமாளிப்பது குறித்து மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் டெல்லியில் அவசர உயர்மட்டக் குழு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நடத்திய இந்த உயர்மட்டக் குழுக் கூட்டத்தில், பல்வேறு மாநிலங்களின் வேளாண் அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் நிபுணர்கள் கலந்து கொண்டனர். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புகளைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், ஜூலை 2-ஆம் தேதியுடன் முடிவடையும் வாரத்திலும் மழைப் பொழிவு பலவீனமாகவே இருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார். இது வானம்பார்த்த பூமியாக இருக்கும் மானாவாரிப் பகுதிகளில் உள்ள காரிஃப் பயிர்களின் விளைச்சலை நேரடியாகப் பாதிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு மற்றும் விஞ்ஞானிகள் குழு இணைந்து நடத்திய அறிவியல் பூர்வ ஆய்வின்படி, போதிய பாசன வசதி இல்லாத மற்றும் பலவீனமான பருவமழையால் பாதிக்கப்படக்கூடிய 315 மாவட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பாசன வசதியின் அடிப்படையில் இந்த மாவட்டங்கள் 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன:
- முதன்மை முன்னுரிமை (High Priority / Primary Concern) – 111 மாவட்டங்கள்:12 மாநிலங்களில் பரவியுள்ள இந்த 111 மாவட்டங்களில் பாசன வசதி என்பது 25 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. இதில் மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டுமே 20 மாவட்டங்கள் அடங்கும்.
- நடுத்தர முன்னுரிமை (Medium Priority) – 76 மாவட்டங்கள்: இங்கு பாசன வசதி 25 முதல் 50 சதவீதம் வரை உள்ளது.
. குறைந்த முன்னுரிமை (Low Priority) – 128 மாவட்டங்கள்:அணைகள் மற்றும் பிற ஆதாரங்கள் மூலம் இங்கு ஓரளவு சிறந்த பாசன வசதிகள் உள்ளன.
மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, பீகார், ஜார்கண்ட், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா உள்ளிட்ட 12 மாநிலங்கள் இதனால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
நெருக்கடி நிலை வரும் வரை நாம் காத்திருக்கப் போவதில்லை, முன்னெச்சரிக்கையாகத் தயாராகி வருகிறோம்” என்று அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உறுதிபடத் தெரிவித்துள்ளார். இதற்காக ICAR தயாரித்துள்ள ‘மாவட்ட வாரியான அவசரகால வேளாண் திட்டங்களை’ உடனடியாகக் கள அளவில் செயல்படுத்த மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் கீழ், குறைந்த மழைப்பொழிவு உள்ள பகுதிகளில் பயிரிட ஏற்ற மாற்றுப் பயிர்களை ஊக்குவித்தல், பயிர் பன்முகத்தன்மை உத்திகள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் நீர் சேகரிப்பு மற்றும் குளங்களைத் தூர்வாரும் பணிகளுக்குத் தற்போதே முன்னுரிமை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.




