டெல்லியில் தீயணைப்பு சிலிண்டர் மீது வண்ணம் பூசி ஆக்சிஜன் சிலிண்டர் என கூறி விற்பனைச் செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நாட்டின் பல்வேறு மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன் தட்டுப்பாடு மற்றும் ரெம்டெசிவிர் மருந்து இல்லாத காரணத்தால் பலர் உயிரிழக்கின்றனர்.
இதனை சரியாக பயன்படுத்தி கொண்டு பலரும் ஆக்சிஜன் சிலிண்டரை அதிக விலைக்கு விற்று வருகின்றனர். இந்த நிலையில், டெல்லி அலிபூர் பகுதியை சேர்ந்த மர்ம நபர்கள் தீயணைப்பு சிலிண்டர் மீது கருப்பு வண்ணம் பூசி அதை ஆக்சிஜன் சிலிண்டர் என்று விற்று வந்துள்ளனர். இதுகுறித்து தொண்டு நிறுவனம் நடத்தி வரும் முகேஷ் கண்ணா என்பவர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து, புகாரின் பேரில் அந்த இடத்தை போலீசார் சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கு மூன்று பேர் தீயணைப்பு சிலிண்டர் மீது ஆக்சிஜன் சிலிண்டரில் இருப்பது போல வண்ணம் பூசி மக்களை ஏமாற்றி சிலிண்டர் விற்றது தெரியவந்தது. மேலும், அந்த ஆக்சிஜன் சிலிண்டரை 4.5 லிட்டருக்கு ரூ.5,000 முதல் ரூ.13,000 வரை விற்பனை செய்துள்ளனர். இதனால் அந்த மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 532 தீயணைப்பு சிலிண்டர்கள், ஆக்சிஜன் சிலிண்டர் முனைகள், வண்ணத்தை அகற்ற பயன்படுத்திய கருவிகளை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.







