மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் நினைவைப் போற்றும் வகையில், சென்னையில் அவரது முழு உருவ சிலை அமைக்கப்படும் என்று அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, வி.பி.சிங்கின் பேத்திகள் நன்றி தெரிவித்தனர்.
முன்னாள் பிரதமர், சமூகநீதிக் காவலர், இந்தியா முழுமைக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களின் பிதாமகர், மறைந்த வி.பி சிங் உத்தரப்பிரதேச மாநிலம், அலகாபாத் மாவட்டத்தில், மிகப்பெரிய ஜமீன்தாரரான ராஜா தயா பகவதி பிரதாப் சிங், என்பவருக்கு மகனாகப் பிறந்தவர். இவரது முழு பெயர் விஸ்வநாத் பிரதாப் சிங். மிகவும் வசதியான குடும்பத்தில் ஆடம்பர வாழ்க்கை வாய்த்தாலும், அதில் மனம் ஒட்டாமல் கல்லூரி படிக்கும் காலத்திலேயே காந்திய இயக்கத்தில் ஈடுபட்டார். சர்வோதய சமாஜில் இணைந்தார். பூமிதான இயக்கத்தில் பங்கெடுத்தார். தனது நிலங்களையே தானமாக வழங்கினார்.
1969-ம் ஆண்டு உத்திரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் நின்று வென்றார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர்; ஒன்றிய வர்த்தக அமைச்சர்; வெளியுறவுத் துறை அமைச்சர்; நிதி அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகிய உயர் பொறுப்புகளை வகித்தார். தேசிய முன்னணியை உருவாக்கி 1989-ம் ஆண்டு இந்தியாவின் பிரதமரானார். வி.பி.சிங் பிரதமராக இருந்தது 11 மாதங்கள் தான் என்றாலும், அவரது சாதனைகள் மகத்தானவை. அப்படிப்பட்ட நல்ல மனிதரின் நினைவை போற்றும் வகையில், சென்னையில் வி.பி.சிங்கின் முழு உருவ கம்பீரச் சிலை அமைக்கப்படும் என தமிழநாடு சட்டப்பேரவையில், 110 விதியின் கீழ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்பிற்கு வி.பி.சிங்கின் பேத்திகளான அத்ரிஜா மஞ்சரி சிங் மற்றும் ரிச்சா மஞ்சரி சிங் ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கங்களில் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.
அதில் சமூகநீதி நாயகரான எங்களது தாத்தா வி.பி.சிங்கிற்கு சென்னையில் முழு உருவ சிலை அமைப்பதாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களது தாத்தாவை பெருமைபடுத்தி இப்படியொரு அறிவிப்பை கொடுத்திருக்கும் முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள் என்று தெரிவித்துள்ளனர்.
https://twitter.com/TRBRajaa/status/1648976443282694144?s=20
தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து வி.பி.சிங்கின் பேத்திகள் தங்களது ட்வீட்டர் பக்கங்களில் வெளியிட்ட வீடியோவை திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா தனது ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
- பி.ஜேம்ஸ் லிசா









