நெல்லையில் விசாரணைக்கு சென்றவரின் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் காவல்துறை மீது புகாரளித்த சதீஷ், சந்தோஷ் மீது விக்கிரமசிங்கபுரம் போலீசார் பொய் வழக்கு பதிந்துள்ளதாக புகாரளிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதி காவல்நிலையங்களில் விசாரணைக்குச் சென்றவர்களின் பற்கள் பிடுங்கப்பட்டு கொடிய சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து சிபிசிஜடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட ராஜேஸ்வரி மகன் சதீஷ் மற்றும் சந்தோஷ் இருவரையும் பொய்யான வழக்கு போட்டு விக்கிரமசிங்கபுரம் காவல்துறையினர் மிரட்டுவதாகவும், வீட்டிற்கு அருகில் நடைபெற்ற பிரச்னையில் தங்கள் மகன்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் ராஜேஸ்வரி புகார் மனு அளித்துள்ளார்.
பல் பிடுங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்டு காவல்துறை மீது புகார் அளித்த காரணத்தினால், தற்போது அவர்களை மீண்டும் விக்ரமசிங்கபுரம் காவல் துறையினர் பொய்யான வழக்குகளை பதிவு செய்து அத்துமீறி வீட்டில் நுழைந்து மிரட்டுவதாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் சதீஷின் தாயார் ராஜேஸ்வரி புகார் மனு அளித்துள்ளார்.
மேலும் காவல்துறை மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற சொல்லி காவல்துறை மிரட்டுவதாக கூறியுள்ளார். ஏற்கனவே பல்பிடுங்கப்பட்ட விவகாரத்தில் சதீஷ் மற்றும் சந்தோஷ் இருவரும் பாதிக்கப்பட்ட நிலையில் இவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் விக்கிரமசிங்கபுரம் காவல்துறையினர் மற்றும் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.







