காவிரி விவகாரத்தில் வரலாறு தெரியாமல் பேசுவதாக கூறிய அமைச்சர் துரைமுருகனுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
“தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை மகளிர் உரிமை தொகைக்கு கொடுப்பதாக இருந்தால் அது சட்டப்படி குற்றமாகும்.
டெல்டாவில் சம்பா சாகுபடி பயிர் கருகி உள்ளது. ஜூன், ஜூலை மாதத்தில்
வர வேண்டிய காவிரி நீரை பெற்றுத் தர அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால்
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி அப்போதைய திமுக அரசிடம் உரிய நீரை பெற வலியுறுத்திய நிலையில் அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் நடவடிக்கை எடுக்காததால் கர்நாடக அரசு தங்களுக்கு நீர் போதவில்லை எனக் கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. ஆனால் அந்த வழக்கையும் திமுக அரசு உரிய முறையில் போராடி வெற்றி பெறுவதற்கான எந்த வழிமுறைகளையும் செய்யவில்லை.
அதற்கான முயற்சியில் அப்போது திமுக கூட்டணியில் இருந்த மன்மோகன்சிங் அரசும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னரே காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப்பட்டு தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் வருவதற்கான ஆணையை பெற்றுத் தந்தார். இதையெல்லாம் மறைத்து விட்டு அமைச்சர் துரைமுருகன் எனக்கு வரலாறு தெரியவில்லை எனவும் வரலாறு தெரியாமல் ஓபிஎஸ் பேசுகிறார் எனக்கூறி வருகிறார்.என்எல்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க
உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியும் அதை இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை. எனவே விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.






