இலவசங்கள் தொடர்பாக விரிவான விவாதம் தேவை – வழக்கு 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

இலவசங்கள் தொடர்பாக விரிவான விவாதம் தேவை என தெரிவித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கை 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.   அரசியல் கட்சிகளின் இலவசங்கள் தொடர்பான அறிவிப்புகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பாஜகவின் அஸ்வினி…

இலவசங்கள் தொடர்பாக விரிவான விவாதம் தேவை என தெரிவித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கை 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

 

அரசியல் கட்சிகளின் இலவசங்கள் தொடர்பான அறிவிப்புகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பாஜகவின் அஸ்வினி உபாத்யாய் பொதுநலன் வழக்கைத் தொடர்ந்தார். இவ்வழக்கில் தொடர்ச்சியாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இலவசங்கள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஹிமா கோலி, சிடி ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நேற்று முன்தினம் நடத்திய விசாரணையில், தேர்தல் கால இலவச வாக்குறுதிகள் நாட்டின் பொருளாதாரத்தை அழித்துவிடும். இதைத் தடுக்க வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்த முடிவை எடுக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள்தான் இத்தகைய வாக்குறுதிகளை அளித்தும் வருகின்றன என்றும் கூறியது.

 

இலவசங்கள் குறித்த வாக்குறுதிகள் என்பது மிக முக்கியமான பிரச்சனை. இது தொடர்பாக விவாதிக்க வேண்டியதும் அவசியம். இதனைத் தடுப்பது தொடர்பாக மத்திய அரசு ஏன் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டக் கூடாது? என்றார். அப்போது குறுக்கிட்ட மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இலவசங்களை அனைத்து அரசியல் கட்சிகளும்தான் அறிவிக்கின்றன. அப்படி அறிவிப்பதை உரிமையாகவும் கருதுகின்றன என்றார்.

பின்னர் இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு, இலவசங்கள் தொடர்பான விரிவான விவாதம் தேவை என்றும், 3 நீதிபதி அமர்வுக்கு இதனை மாற்றியும் உத்தரவிட்டார்.

 

இலவசங்களை சாதாரணமாக கடந்து செல்ல முடியாததால், இந்த வழக்கில் விரிவான விவாதம் தேவை என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே தேர்தல் இலவசம் தொடர்பாக 2013-ல் சுப்பிரமணிய பாலாஜி என்பவர் தொடர்ந்த வழக்கில் உத்தரவுகளை பரீசீலனை செய்ய வேண்டும் என்பதால் கூடுதல் விசாரணைக்காக வழக்கை 3 நீதிபதி அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.