மகாராஷ்டிரா, பீகாரைத் தொடர்ந்து டெல்லியிலும் அரசியல் குழப்பம்?

மகாராஷ்டிரா, பீகாரைத் தொடர்ந்து டெல்லி அரசியல் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் குறித்து விவரிக்கிறது இந்தச் செய்தித் தொகுப்பு. மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பாஜக, அனைத்து மாநிலங்களிலும் தங்களது கட்சியின் ஆட்சி இருக்க வேண்டும். இல்லையெனில்…

மகாராஷ்டிரா, பீகாரைத் தொடர்ந்து டெல்லி அரசியல் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் குறித்து விவரிக்கிறது இந்தச் செய்தித் தொகுப்பு.

மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பாஜக, அனைத்து மாநிலங்களிலும் தங்களது கட்சியின் ஆட்சி இருக்க வேண்டும். இல்லையெனில் கூட்டணி ஆட்சி நடைபெற வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றன. இதற்கு உதாரணமாக, அண்மையில் மகாராஷ்டிராவில் உத்ததேவ் தக்கரே தலைமையிலான, சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்க்கப்பட்டு பாஜக ஆதரவுடன் ஏக்நாத் சிண்டே முதலமைச்சரான விவகாரம் சுட்டிக்காட்டப்படுகிறது.

அந்த வரிசையில் டெல்லியில் தங்கள் ஆட்சியைக் கவிழ்க்கச் சதி நடப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. அண்மையில், டெல்லி மாநில அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ஹவாலா வழக்கில் கைது செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து, மதுபான பார் ஒதுக்கீட்டில் அரசுக்கு 1000 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது எனக் கூறி, டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியது. அதற்கு எதிர்வினையாற்றிய அரவிந்த் கெஜ்ரிவாலும், மனிசும் தங்கள் மீது போலியாகக் குற்றம் சாட்டுவதாகவும், அதற்கு சிபிஐ போன்ற புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தவறாக வழிநடத்துவதாகவும் கூறினர்.

அண்மைச் செய்தி: ‘‘ஆட்டோ முன்பதிவுக்கு செயலி உருவாக்குவதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது’ – போக்குவரத்துத்துறை தகவல்’

போலியான குற்றச்சாட்டுகளைக் கூறி, தாங்கள் கைது செய்யப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை எனவும் அவர்கள் கூறியது அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து கட்சியின் எம்.எல்.ஏக்களின் கூட்டத்தை கூட்டி அர்விந்த் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தினார். பிறகு அவர்களுடன் மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட் சென்று பிரார்த்தனை செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால் ஆம் ஆத்மியின் எம்.எல்.ஏக்களை, விலை பேச 800 கோடி ரூபாயில் பாஜக ஆபரேசன் லோட்டஸ் என்ற பெயரில் திட்டமிட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டினார். ஆபரேசன் லோட்டஸ் தோல்வியடையவும், பாஜகவுக்கு நல்ல அறிவை வழங்கும் படி பிரார்த்தனை செய்ததாகவும் கெஜ்ரிவால் கூறினார். ஆனால் இந்த குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு பாஜகவுக்கு வந்தால் வழக்குகள் வாபஸ் வாங்கப்படும், முதலமைச்சராக்கப்படுவீர்கள் என பாஜக பேரம் பேசியதாக மனீஷ் சிசோடியா தெரிவித்திருந்தார் அதே போல் ஆம் ஆத்மியின் சோம்நாத் பாரதி, அஜய் தத், குல்தீப் குமார் ஆகிய எம்.எல்.ஏக்களும் பாஜக தங்களை அணுகி கட்சி மாற நிர்ப்பந்தம் செய்ததாகக் கூறியுள்ளனர். ஒரு எம்.எல்.ஏவுக்கு 20 முதல் 25 கோடி ரூபாய் வரை தருகிறோம் எனப் பேரம் பேசியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். புது டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசைக் கவிழ்க்க பாஜக 800 கோடி ரூபாயில் திட்டமிட்டு வருகிறது எனவும் அவர்கள் குறிப்பிட்டனர். அதனால், டெல்லி அரசியலில் குழப்பம் அதிகரித்துள்ளது.

– ரா.தங்கபாண்டியன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.