வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வளிமண்டல சுழற்சி காரணமாக பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக வடமேற்கு வங்கக்கடல் மற்றும் ஒடிசா கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவாகியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனால், ஒடிசாவில் 10-ம் தேதி வரை கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் இந்த தாழ்வு பகுதி மேலும் வலிமை அடையும் என்றும், கடலில் இருந்து 7.6 கிலோ மீட்டர் உயரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது என்றும் தெரிவித்திருந்தது. இதனால் ஒடிசா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியது. மேலும் மேற்கு வங்கத்தில் தீவிர கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வங்கக்கடலில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதேபோல், தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் 50 முதல் 60 கிமீ வேகத்தில் காற்று வீசும் வாய்ப்பு உள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் இன்னொரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுவதாகவும், இந்த சுழற்சி காரணமாக அரபிக்கடலை ஒட்டியுள்ள பகுதிகளிலும் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, தமிழ்நாட்டிலும் ஒருசில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது. முக்கியமாக காவிரி கரையோர மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது.
– இரா.நம்பிராஜன்








