கன மழை: உதகை, குந்தா, கூடலூர், பந்தலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை

கன மழை காரணமாக உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஓரிரு…

கன மழை காரணமாக உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் சில நாட்களாக பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, கரூர், மதுரை ஆகிய 12 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம். நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் வட கடலோர மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக இதுவரை 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. பல்வேறு பகுதிகளில் மழையுடன் கூடிய பலத்த காற்றும் வீசி வருவதால் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. இதனால், போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு, மின் விநியோகமும், குநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பலத்த மழை காரணமாக உதகை, குந்தா , கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட நான்கு தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.