கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அருகே அனுமதியின்றி குழந்தைகள்
மைய மேற்கூரையை ஒப்பந்ததாரர் சேதப்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போச்சம்பள்ளியை அடுத்த புளியம்பட்டி கிராமத்தில் குழந்தைகள் மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் 15 குழந்தைகள் படித்து வருகின்றனர். இம்மைய கட்டடத்தின் மேற்கூரை பழுதடைந்திருப்பதால், மழை காலங்களில் மழை நீர் கட்டிடத்தினுள் வருவதாக புகார் வந்தது. இதனால், மேற்கூரையை மாற்ற ஒப்புதல் பெறப்பட்டது.
இதையடுத்து, நேற்று வந்த ஒப்பந்ததாரர் அங்கன்வாடி பணியாளர் இல்லாத நிலையில்,
மேற்கூரையை உடைத்தெடுத்து சென்றுள்ளார்.
இதனால், நேற்று இரவு மழை பெய்த காரணத்தால் கட்டடத்தினுள் இருந்த அனைத்து
பொருட்களும் மழையில் நனைந்து சேதமானது. மாணவர்களின் உணவு தேவைக்கான
அரிசி, பருப்பு, சத்து மாவு மற்றும் மாணவர்களின் விளையாட்டு பொருட்கள் உள்ளிட்ட
அனைத்து பொருட்களும் நாசமாயின.
இன்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்த அங்கன்வாடி பணியாளர் பழனியம்மாள், மேற்கூரை இடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து ஒப்பந்ததாரரை கேட்டபோது, பணி ஆணை வழங்கப்பட்டதால் பணிகளை
துவக்கிவிட்டோம் என பதில் தெரிவித்துள்ளார். மேலும், அங்கன்வாடி மேற்பார்வையாளர்
மீனாவிடம் கேட்டபோது, அங்கன்வாடி பணியாளர் பழனியம்மாள் இரண்டு குழந்தைகள் மையத்தில் பணிபுரிந்து வருகிறார். ஒப்பந்ததாரர் குழந்தைகள் மைய ஆயாவிடம் தெரிவித்த பிறகு மேற்கூரையை எடுத்துள்ளார். தற்போது மேற்கூரையற்ற குழந்தைகள் மையத்திலிருந்து 15 குழந்தைகள் மாற்று கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.
கு. பாலமுருகன்







