மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மேல்புறத்தில் அனுமதியின்றி ட்ரோன் இயக்கிய 2 பெண் பொறியாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பாதுகாப்புக்குட்பட்ட பகுதி என்பதால் கோயில் கோபுரத்தின் மேற்பரப்பில் ட்ரோன் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜூன் 22 ம் தேதி மதியம் பெங்களூரை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இரண்டு பெண் பொறியாளர்களும் விடுதியில் தங்கியிருந்தபடி ட்ரோன்களை இயக்கியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ட்ரோன் கோயில் கோபுரத்தின் மீது மோதி கீழே விழுந்து நொறுங்கியது.
இதனை கண்ட காவல்துறையினர் ட்ரோன் இயக்கிய இரு பெண் பொறியாளர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து இருவரிடமும் கோயில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் இவர்கள் மகராஷ்ட்ராவை சேர்ந்த சயலி சிங்கர், ஸ்ருதி உர்குடே ஆகியவர்கள் என்பதும் இவர்கள் ட்ரோனை முதல்முறையாக இயக்க முற்பட்டபோது கீழே விழுந்து நொறுங்கியதாக தெரியவந்தது. எனவே ஏர் கிராப்ட் சட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
அனகா காளமேகன்






