விமானப்படை குடியிருப்பு பூங்காவில் விளையாடிய சிறுவன், சிறுமி மின்சாரம் தாக்கி பலி!

கோவை விமானப்படைக்கு சொந்தமான குடியிருப்பு பூங்காவில் விளையாடிய இரண்டு குழந்தைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.   கோவை சரவணம்பட்டி துடியலூர் சாலையில் விமானப்படைக்கு சொந்தமான ராமன் விகார் என்ற குடியிருப்பு உள்ளது.  இங்கு 400 குடும்பங்கள்…

கோவை விமானப்படைக்கு சொந்தமான குடியிருப்பு பூங்காவில் விளையாடிய இரண்டு குழந்தைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.  

கோவை சரவணம்பட்டி துடியலூர் சாலையில் விமானப்படைக்கு சொந்தமான ராமன் விகார் என்ற குடியிருப்பு உள்ளது.  இங்கு 400 குடும்பங்கள் வசித்து வருகின்றன.  இந்த குடியிருப்பில் வசிக்கும் குடும்பங்கள் அனைவரும் விமானப்படையில் பணிபுரிந்தவர்கள் மற்றும் பணி ஓய்வு பெற்றவர்கள்.

இந்த நிலையில் இங்கு குடியிருக்கும் பிரசாந்த் ரெட்டி என்பவரின் மகன் ஜியானஸ் ரெட்டி (6) மற்றும் பாலசுந்தர் என்பவரின் மகள் வியோமா (8) ஆகியோர் அங்குள்ள சிறுவர் விளையாட்டு பூங்காவில் விளையாடச் சென்றுள்ளனர்.  அங்கு சறுக்கு விளையாடும்  உபகரணம் அருகே சென்றபோது, திடீரென மின்சாரம் பாய்ந்ததில் இருவரும் மயங்கி விழுந்தனர்.

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  ஆனால் அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து சரவணம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.  பூங்கா வளாகத்தில் உள்ள மின் கம்பியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக அங்கிருந்த உபகரணத்தில் மின்சாரம் பாய்ந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.  இது தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.