தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்காக அதிமுக – பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டுகின்றன. அதேபோல், நாம் தமிழர் மற்றும் தவெகவும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். அரசியல் கட்சிகளின் பிரச்சாரம், வியூகங்களால் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடர் இன்று (20.1.26) தொடங்கியது. இது 2026 ஆம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர். சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக வருகை புரிந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மலர்க்கொத்து, கலைஞர் மு.கருணாநிதி வரலாறு புத்தகத்தை கொடுத்து சபாநாயகர் அப்பாவு வரவேற்றார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை தொடங்கியது. இந்நிலையில் உரையை படிக்காமல் இந்த ஆண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். தொடர்ந்து 4-வது ஆண்டாக உரையை படிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியதால் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சட்டம், ஒழுங்கு விவகாரம் குறித்து விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுத்ததாகக்கூறி அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் சட்டசபையில் நடந்தது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசியவர், “வரும் 22, 23 ஆம் தேதிகளில் கேள்வி-பதிலுடன் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறும். தொடர்ந்து 24-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளிப்பார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் உரிமையை மறுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை.
ஆளுநர் மாளிகையை விட்டு வெளியே வந்து, ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சிக்கலாம். சபாநாயகர் பேசும் போது மற்ற உறுப்பினர்களின் மைக் அணைக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். உரையை வாசிக்காமல் குடியரசு தலைவர் இதுபோல் வெளிப்படையாக நடந்து கொள்ள முடியுமா?
ஆளுநரிடம் கடமையை செய்யும்படி வேண்டுகோள் விடுத்தோம். அரசு தயாரித்து கொடுத்த அறிக்கையை வாசிப்பது ஆளுநரின் கடமை. ஜனநாயக கடமையை பின்பற்றி ஆளுநருக்கு அழைப்பு விடுத்தோம். சட்டசபையில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, இறுதியில் தேசிய கீதம் இசைக்கும் மரபு என்றும் மாற்றப்படாது. யாருக்கும் பயந்து தமிழ்நாடு சட்டசபையின் மரபு என்றும் மாற்றப்படாது என்று தெரிவித்துள்ளார்.







