பொங்கலுக்கு மது வணிகம் ரூ.850 கோடி: குடும்பங்களை சீரழிப்பதில் திமுக மீண்டும் சாதனை – அன்புமணி!

மது விற்பனை ஓராண்டில் 20% அதிகரிப்பதென்பது மகிழ்ச்சியளிக்கும் விஷயமல்ல என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளையொட்டி, கடந்த 14, 15, 17, 18 ஆகிய நாள்களில் மொத்தம் ரூ.850 கோடிக்கு டாஸ்மாக் மூலம் மது விற்பனை செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்துதில் தோல்வியடைந்து விட்ட திமுக அரசு, மதுவைக் கொடுத்து ஏழைக் குடும்பங்களைச் சீரழிப்பதில் மட்டும் தான் அருவருக்கத்தக்க சாதனை மேல் சாதனை செய்து வருகிறது என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.

கடந்த ஆண்டு பொங்கல் திருநாளின் போது, ரூ.710 கோடிக்கு மது வணிகம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், இப்போது ரூ.140 கோடிக்கு அதிக மது விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இது கிட்டத்தட்ட 20% அதிகம் ஆகும். மது விற்பனை ஓராண்டில் 20% அதிகரிப்பதென்பது மகிழ்ச்சியளிக்கும் விஷயமல்ல. சமூகச் சீரழிவின் அடையாளமாகவே இதை பார்க்க முடியும். இதற்கெல்லாம் ஒரே தீர்வு தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது தான். அதை பாட்டாளி மக்கள் கட்சி விரைவில் சாத்தியமாக்கும்’. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.