கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே 16 வயது சிறுவன்
பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வுகாக , தமிழகம் முழுவதும் மிதிவண்டியில்
சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, கல்லாவி கல்குண்டு பகுதியைச்
சேர்ந்த சென்னப்பனின் மகன் ஜீவானந்தம். 16 வயதான இச்சிறுவன் கல்லாவி
அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துள்ளார். மேலும், ஜீவானந்தம் சிறு வயது முதல்
சமூக அக்கறையில் ஆர்வம் கொண்டுள்ளதால், கடந்த பிப்ரவரியில் கோவாவிற்கு
சைக்கிளில் சென்றுள்ளார்.
மேலும், கடந்த மாதம் இந்தியா பசுமை நாடாக மாற வேண்டும் என்றும், இரண்டு,
நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் தீ வைப்பு மூலம் ஏற்படும் புகை மண்டலம்
குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தமிழகத்தில் இருந்து ஜம்முகாஷ்மீர்
வரை வாகனங்களில் லிப்ட் கேட்டு மற்றும் நடை பயணமாகவும் சென்று வந்தார்.
தற்போது இந்த பயணத்தை மேற்கொண்டு உள்ளார்.
இவர், தற்போது தமிழகம் முழுவதும் உள்ள 39 மாவட்டங்களிலும் பிளாஸ்டிக்
மற்றும் மறுசுழற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி, கல்குண்டு பகுதியிலிருந்து சைக்கில் மூலம் சுற்றுப் பயணத்தை துவக்கினார்.
அவர் போச்சம்பள்ளி வந்தபோது புளியம்பட்டி பஞ்சாயத்து தலைவர் ரங்கநாதன்,
கவுன்சிலர் அம்மன்ராஜா, இளையராஜா மற்றும் அப்பகுதியில் இருந்த 50க்கும்
மேற்பட்டோர் சிறுவன் ஜீவானந்தத்திற்கு மாலை அணிவித்தனர். மேலும்,
அவருடன் ஷெல்பி எடுத்து விழிப்புணர்வு பயணம் வெற்றி பெற வாழ்த்து
தெரிவித்து வழி அனுப்பி வைத்தனர்.
—கு.பாலமுருகன்







