தென்னிந்தியத் திரையுலகின் ஜேம்ஸ்பாண்ட் என அழைக்கப்பட்ட நடிகர் ஜெய்சங்கர், இரவும் பகலும் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அவர் பாடி நடித்த முதல்பாடலில் வந்த கண் என்ற வார்த்தை, அன்புள்ள மான் விழியாக தொடர்ந்து, கண்ணே கண்டதெல்லாம் காட்சியா, கண்டேன் கல்யாண பெண் போன்ற பாடல்களில் தொடர்ந்தது…
இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பா மூலம் ஜோசப் தளியத் என்ற இயக்குநரின் அறிமுகம் கிடைக்க சங்கராக இருந்தவர் ஜெய்சங்கராகிவிட்டார். அந்தக்காலத்தில் பிரபல நடிகர்களை கண்டால் அண்ணே வணக்கம், நமஸ்காரம் அண்ணே என சம்பிரதாயமான வார்த்தைகளில் அழைப்பது வாடிக்கையாக இருந்த நிலையில், அவற்றையெல்லாம் ஒதுக்கி, ஹாய் என்ற ஒற்றைச் சொல்லுக்கு மாற்றிவிட்டார் நடிகர் ஜெய்சங்கர்.
இப்போதெல்லாம் கடைகள் திறப்பு விழா, தொடக்க விழாவில் பங்கேற்க, நட்சத்திரங்கள் கட்டணமாக பெருந்தொகை வசூலிக்கும் நிலையில், விழாக்களில் பங்கேற்கும் ஜெய்சங்கர், தனக்கு வழங்கப்படும் தொகையை தான் கையோடு அழைத்துச் சென்ற தொண்டு நிறுவன காப்பக நிர்வாகிகளிடம் மேடையிலேயே வழங்குவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். தான் நடித்த படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் சிரமப்பட்டபோது, தனது சம்பளத்தை குறைத்து திரைப்படங்கள் வெளியாக உதவிபுரிந்தார். இவரது படங்கள் வாரம் ஒன்றென வெளிவந்த வண்ணம் இருந்ததால் ‘Friday hero’ என அழைக்கப்பட்டார்.
இரவும் பகலும் என்ற ஜெய்சங்கரின் முதல் படமே 100 நாட்கள் ஓடிய நிலையில் அடுத்த 7 ஆண்டுகளில் 100 படங்களில் நடித்து சாதனை படைத்தார் ஜெய்சங்கர்… ஒருகட்டத்தில் தனக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் டெல்லியில் சிலகாலம் பணிபுரிந்து விட்டு மீண்டும் திரைப்படங்களில் நடித்ததும், வில்லனாக மாறி ரஜினியுடன் முரட்டுக்காளை திரைப்படத்தில் நடித்து மறுபடி வலம் வந்ததும் ஜெய்சங்கரின் பண்புக்கு கிடைத்த வெற்றி…
தனது திரைப்படங்களில் விழி என்றும், கண் என்றும் வரிகளை பாடிய ஜெய்சங்கரின் மகன் விஜய்சங்கர் சென்னையில் பிரபல கண்மருத்துவராக இருக்கிறார்.










