கள்ளச்சாராயம் அருந்தி 9 பேர் உயிரிழப்பு – விழுப்புரம் விரைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் சென்றார்.  விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை அதே கிராமத்தை சேர்ந்த 16 பேர்…

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் சென்றார். 

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை அதே கிராமத்தை சேர்ந்த 16 பேர் வாங்கி குடித்துள்ளனர். இதையடுத்து அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், 16 பேரும் முண்டியம்பாக்கம், மரக்காணம் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில், 6 பேர் உயிரிழந்த நிலையில், கள்ளச்சாராய விற்பனையை தடுக்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து, இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், கள்ளச்சாராய வியாபாரி அமரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த சம்பவத்தை அடுத்து, கள்ளச்சாராய விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். கடலூரில் கடந்த 24 மணி நேரத்தில் 22 பேரை கைது செய்துள்ள போலீசார், 88 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதனிடையே, கள்ளச்சாராயத்தை கண்டுபிடித்து ஒழிப்பதற்கு சிறப்பு தேடுதல் வேட்டை நடத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். விஷ சாராய வேட்டையில் ஈடுபட மாவட்ட எஸ்பி, ஆணையர், மதுவிலக்கு போலீசாருக்கு ஆணையிட்டுள்ள டிஜிபி, ஆலை, மருத்துவமனை, ஆய்வகத்தில் உள்ள மெத்தனாலை பயன்படுத்தி விஷ சாராயம் தயாரிப்பா என கண்டறியவும் ஆணை பிறப்பித்துள்ளார்.

இதனிடையே, கள்ளச்சாராயம் குடித்து ஆபத்தான நிலையில் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயன், சங்கர் உள்ளிட்ட 3 பேர் இன்று சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால், கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. மேலும், பலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விழுப்புரம் செல்கிறார். இன்று பிற்பகல் விழுப்புரம் செல்லும் முதலமைச்சர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரையும் சந்திக்க உள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.