திருத்தணியில், பட்டப்பகலில் 85 வயது மூதாட்டியை கட்டிப்போட்டு, 10 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்ற தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில், தனலட்சுமி என்ற 85 வயது மூதாட்டி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த ஒரு தம்பதி, தங்களிடம் ரேஷன் அரிசி இருப்பதாகவும் அதனை விலைக்கு வாங்கிக் கொள்ளுமாறும் கூறியுள்ளனர். மூதாட்டி, அவர்களை வீட்டிற்குள் அனுமதித்து, அவர்கள் கொண்டு வந்த ரேஷன் அரிசியை பார்த்துள்ளார்.
அப்போது, தெருவில் ஆள் நடமாட்டம் இல்லாததை உறுதிப்படுத்திக் கொண்ட அந்த தம்பதி, தனலட்சுமியை சேரில் உட்கார வைத்து கட்டிப்போட்டு விட்டு, அவர் அணிந்திருந்த 10 சவரன் நகையை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். நீண்டநேரமாக மூதாட்டி வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது, இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
புகாரின்பேரில் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.








