காதலுக்கு எல்லை இல்லை என்பதை ராஜஸ்தானில் பாதுகாவலராக பணி புரியும் 82 வயது முதியவர் நிரூபித்துள்ளார்.
ராஜஸ்தானின் குல்தாரா என்ற கிராமத்தின் பாதுகாவலராக பணியாற்றி வருபவர் தனது முதல் காதலைப் பற்றி பகிர்ந்து கொண்ட அனுபவம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் பகிர்ந்துகொண்ட தகவல்களின் படி, தற்போது 82 வயதாகும் இவர் 1970ம் ஆண்டு ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மர் பகுதியில், ஆஸ்திரேலியாவிலிருந்து சுற்றுலா வந்த மரினா என்பவரை சந்தித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது மெரினாவுக்கு இவர் ஒட்டகச்சவாரி செய்வது பற்றி கற்றுக்கொடுத்துள்ளார். சுமார் ஐந்து நாட்கள் இருவரும் ஒன்றாக பயணித்துள்ளனர். பயணத்தின் முடிவில் மெரினா அவரை காதலிப்பதாக கூறியுள்ளார். அதுவரை வாழ்நாளில் வேறு யாரிடமிருந்து அது போன்ற வார்த்தைகளை கேட்டதில்லை என்பதால் அவருக்கு அதிர்ச்சி அளிக்கும் ஒன்றாகவே இருந்தது. இதைத்தொடர்ந்து அவர் மெரினாவின் காதலை ஏற்றுக்கொண்டார்.
அடுத்த சில நாட்களிலேயே மெரினா ஆஸ்திரேலியாவுக்கு சென்றுவிட்டார். இருந்தும் கடிதங்கள் மூலம் தங்களது காதலை இருவரும் வளர்த்துக்கொண்டனர். மெரினாவை சந்திக்க, இவர் வீட்டுக்கு தெரியாமல் ரூ30,000 கடன் வாங்கி ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார். அங்கே மூன்று மாதங்கள் இருவரும் ஒன்றாக கழித்துள்ளனர். இறுதியாக திருமணம் செய்துகொள்ளலாம் என்று முடிவு எடுத்த சமயத்தில் மெரினா, ஆஸ்திரேலியாவை விட்டு இந்தியாவுக்கு வரவும், இவர் ஆஸ்திரேலியாவில் தங்கவும் சம்மதிக்கவில்லை.
இதனால் இருவரும் அப்போது பிரிந்துவிட்டனர். இதைத்தொடர்ந்து அவர் திருமணம் செய்து கொண்டு, ராஜஸ்தானின் குல்தாரா என்ற கிராமத்தின் பாதுகாவலராக பணியாற்றத் தொடங்கினார். அவருக்கு குழந்தைகள் பிறந்து, அவர்களுக்கும் திருமணம் ஆனது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவியும் இறந்துவிட்டார்.
இந்நிலையில் மெரினா அவருக்கு தற்போது கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் மெரினா இதுவரை யாரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றும் விரைவில் அவரை பார்க்க இந்தியா வர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக 82 வயதான பாதுகாவலர் கூறுகையில் ‘ நான் 21 வயதாக மாறிவிட்டதுபோல் உணர்கிறேன். என் முதல் காதல் மீண்டும் எனக்கு கிடைத்து விட்டது. இந்த உணர்வை எப்படி வெளிப்படுத்துவது என்று எனக்கு தெரியவில்லை’ என்று கூறினார்.