பெண்களை அவதூறாக பேசி வரும் திமுகவினருக்கு, இந்த தேர்தல் மூலம் மக்கள் உரிய பதிலடியை கொடுக்க வேண்டும், என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
சேலம் மாவட்டம், சங்ககிரி தொகுதி அதிமுக வேட்பாளர் சுந்தரராஜனை ஆதரித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அதிமுக கூட்டணி வெற்றிக் கூட்டணி என்றும், மக்கள் நலனுக்கான கூட்டணி என்றும் தெரிவித்தார். திமுக ஆட்சிக்கு வந்தால், பொதுமக்களின் சொத்துக்கள் அனைத்தும், திமுகவினர் வசம் சென்றுவிடும் என குறிப்பிட்ட அவர், தற்போதே ஸ்டாலின் முதலமைச்சர் ஆகிவிட்டதை போன்று பேசி வருவதாக விமர்சனம் செய்தார்.
தொடர்ந்து பேசிய அவர், அதிமுக ஆட்சியில் கட்டப் பஞ்சாயத்து, நில அபகரிப்பு போன்ற எந்த பிரச்னைகளும் இன்றி, மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வருவதாக குறிப்பிட்ட அவர், ஆட்சியில் இல்லாதபோதே அராஜகம் செய்யும் திமுக, ஆட்சிக்கு வந்தால் மக்களின் நிம்மதி போய்விடும் என தெரிவித்தார்.
முன்னதாக, சேலம் மாவட்டம், வீரபாண்டி தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜமுத்துவை ஆதரித்து, பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர், சேலம் மாவட்டம், அதிமுகவின் கோட்டை என்றும், மு.க.ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர்கள், சேலத்தையே சுற்றி வருவதாகவும் தெரிவித்தார். திமுகவில் குடும்பம்தான் கட்சி, கட்சிதான் குடும்பம் என்றும், குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே அங்கு பதவி வழங்கப்படுவதாக விமர்சனம் செய்தார். ஆனால், அதிமுகவில், சாதாரண தொண்டன் கூட எம்எல்ஏ, அமைச்சர், முதலமைச்சர், ஆகிய பதவிகளை வகிக்க முடியும் என்று குறிப்பிட்ட அவர், திமுக தலைவர் ஸ்டாலின் 24 மணி நேரமும், முதலமைச்சர் கனவில் மிதப்பதாகவும், அவரது கனவு ஒருபோதும் பலிக்காது என்றும் விமர்சித்தார்.







