இலங்கையில் பொருளாதார நெருக்கடி தொடருவதால் யாழ்ப்பாணத்தில் இருந்து இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் அகதிகளாக இன்று தனுஷ்கோடி வந்தடைந்தனர்.
கடந்த ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பெட்ரோல், டீசல் போன்றவற்றிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் அன்னிய செலவாணி இருப்பு குறைந்ததால் வெளிநாடுகளில் இருந்த அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் அரசு திணறி வருகிறது. இதன் விளைவாக அரிசி முதல் காய்கறி வரை அனைத்து உணவுப்பொருட்களின் விலை மிகவும் அதிகரித்துள்ளது. இதனால் அங்கு வாழ்வாதாரம் இழந்தும், வாழ வழியின்றியும் இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாடு வருவது அதிகரித்துள்ளது.
இதுவரை 257 பேர் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு தமிழ்நாட்டிற்கு தஞ்சமடைந்துள்ளனர். இவர்கள் மண்டபம், ராமேஸ்வரம் உள்ளிட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து மேலும் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் அகதிகளாக இன்று தனுஷ்கோடி வந்தனர். தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும காவல்துறை ஆய்வாளர் கனகராஜ் தலைமையில் அங்கு சென்ற போலீசார் அவர்களை பாதுகாப்புடன் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மரியா(35), அபிலாஸ்(16), அபினாஸ்(14), ஜாக்சன்(8) மற்றும் விஜயகுமார்(50) அவரது மனைவி தர்ஷிகா(34), அஸ்நாத்(15), யோகேஷ்(11) ஆகியோர் என்பதும் விலைவாசி உயர்வு வேலையின்மை உள்ளிட்ட காரணங்களால் அகதியாக தனுஷ்கோடி வந்ததாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மத்திய, மாநில உளவுத்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







